சென்னை,
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் நாசர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “எல்லாருக்கும் தெரியும். நான் பொதுவான ஆள். எந்தக் கட்சியையும் சாராதவன். மக்களின் சார்பாக நான் பேசுகிறேன். இது தேர்தல் காலம். இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்தலை நெருங்க இருக்கிறோம். அடுத்த ஒரு நிர்வாகத்தை, அரசை, அடுத்த 5 ஆண்டுகளுக்கு என்னுடைய வரி, முன்னேற்றம் எல்லாவற்றையும் தீர்மானிக்கக் கூடிய ஒரு கட்டாயத்தில் இருக்கிறோம்.
அப்போது நாம் என்னவெல்லாம் யோசிக்க வேண்டும்? ஒன்றும் கிடையாது. ஒரு புடவை வாங்கப் போனால் கூட எத்தனை கேள்விகள் கேட்போம். நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் ஒரு அரசை தேர்வு செய்யும் போது என்னவெல்லாம் கேள்விகள் வர வேண்டும்? ஆனால் அந்த கேள்விகளை நாம் கேட்பது இல்லை. கட்சிக்கு ஒரு கொள்கை வேண்டும். ஆனால் இப்போது என்ன? வெறும் பிரபலமாக இருப்பது மட்டுமே போதும் என்று ஒரு கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். திட்டங்களை பட்டியலிட்டு சொல்வது மட்டும் கட்சி அல்ல. எல்லோரும் சொல்வார்கள் வீடு கட்டித் தருவேன் என்று. அது திட்டங்கள்…
திட்டங்கள் கொள்கை ஆகாது. எந்த கொள்கையின் அடிப்படையில் நீங்கள் அரசை நடத்தப் போகிறீர்கள் என்ற ஒரு கொள்கை இருக்க வேண்டும். இந்த ஒரு அரசு ஒரு கொள்கையோடு இருக்கிறது. அதற்கு ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதற்கு பின்னால் அடுத்த தலைமுறைக்கு சொல்லக்கூடிய வீரச்செயல்கள் இருக்கின்றன, தியாகங்கள் இருக்கின்றன, வரலாறு இருக்கிறது. ஆனால் படங்களை பட்டியலிட்டு இதனால் நான் அரசமைப்பேன் என்று சொன்னால் அது எனக்கு தேவையில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.
