சென்னை,
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தூர் வாரும் பணிகள் 24 மாவட்டங்களில் 5,954 கி.மீ. தூரத்திற்கு ரூ.125 கோடி மதிப்பில் 16 இடங்களில் தூர் வாரும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. கடந்தாண்டு தஞ்சை மாவட்டத்தில் ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், வடிகால்கள் ஆகியவற்றில் 1,380 கி.மீ தூரத்துக்கு ரூ.26.28 கோடி மதிப்பீட்டில் 291 இடங்களில் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் முழுமையாக தூர்வாரப்படவில்லை என்று விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். நடப்பாண்டு காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் நடக்கிறது. இப்பணிகள் முடிந்ததும் பருத்தி, உளுந்து, பச்சை பயறு உள்ளிட்ட தானியங்களை விவசாயிகள் சாகுபடி செய்வார்கள் என்பதால் குறைந்தளவு தண்ணீர் போதுமானது.
எனவே மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பதற்கு முன்பாக ஏபிசிடி வாய்க்கால்களை தூர்வார வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்ததும் கண்துடைப்பாக வாய்க்கால்களை தூர்வாருவதை கைவிட்டு ஏபிசிடி வாய்க்கால்களை தலைப்பில் இருந்து முழுமையாக தூர்வார வேண்டும். இவ்வாய்க்கால்களை நிலஅளவை கணக்கீடு செய்து தூர்வார வேண்டும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் தேர்தல் விதிமுறைகளை கூறி தனியாரால் பணிகளை செய்ய தடை ஏற்படலாம். ஆனால் வேளாண்துறையே தூர்வாரும் பணியை மேற்கொண்டால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். தேர்தல் விதிமுறை மீறல் இருக்காது.
வாய்க்காலை தூர்வாரும் மண்ணை கரைகளிலேயே வைக்கக்கூடாது. மழை பெய்தால் மீண்டும் மண் கரைந்து வாய்க்காலை மூடிவிடுகிறது. இதனால் தண்ணீர் வடியாமல் விளைநிலங்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் சம்பா, தாளடி அறுவடைப்பணிகள் முடிந்தவுடன் ஏபிசிடி வாய்க்கால்களை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் முழுமையான தூர் வார ஆண்டுதோறும் சுமார் ரூ.1,000 கோடி தேவைப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள், வரத்து வாய்க்கால்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளன. தூர்ந்து போகும் வாய்க்கால்கள், வடிகால்கள் பொதுப் பணித்துறை சார்பில் தூர்வாரப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் தூர்வாரும் பணிகளை தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு கொடுக்காமல், வேளாண் பொறியியல் துறையை கொண்டே செய்ய வேண்டும். அப்போதுதான் பணிகளில் தரம் இருக்கும். வடிகால் வாய்க்கால்களை வருவாய்த்துறையின் பதிவேட்டின்படி சர்வே செய்து பணிகள் தொடங்க வேண்டும். இதற்காக அந்தந்த பகுதி விவசாயிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த தொகையை மாநில அரசு மத்திய அரசிடம் கேட்டு பெற வேண்டும் என கடந்த 19-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்தேன்.
எனவே தூர்வாரும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.1,000 கோடி தேவையென விவசாயிகள் கோரிக்கை வைத்த நிலையில், வருகின்ற தேர்தலுக்காக ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்து இருப்பது யானைப்பசிக்கு சோளப்பொறி என்ற சொலவடைக்கேற்ப இது விவசாயிகளை ஏமாற்றும் செயலாகும். தமிழக அரசு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி அனுமதி பெற்று மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று முழுமையாக தூர்வார வேண்டும். தேர்தல் ஆணையமும் இப்பணிக்கு விலக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
