ஆகாஷ் மரண வழக்கில் 6 போலீசார் பணியிடை நீக்கம்

மதுரை,

மானாமதுரையில் சாலையில் நடந்து சென்றவர்களை அரிவாளால் வெட்டியதாக ஆகாஷ் என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, போலீசில் பிடிபடாமல் இருப்பதற்காக ஆகாஷ் தப்பியோடிபோது தவறி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறி சிகிச்சைக்காக அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஆகாஷ் உயிரிழந்தார்.

இதையடுத்து ஆகாஷை போலீசார் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கி கொலை செய்துள்ளனர் என குற்றம் சாட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் ஆகாஷ் உடலை பிரேத பரிசோதனை செய்யவும், வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்க்கவும் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. வழக்கில் எஸ்சி, எஸ்டி பிரிவும் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், ஆகாஷ் மரண வழக்கில் 6 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒரு ஆய்வாளர், ஒரு எஸ்.ஐ, 4 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம், சிவகங்கை சரக டிஐஜி மணிவண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

Source link