சென்னை,
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2011 முதல் 2021 வரையிலான ஆட்சிக் காலத்தில், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தினோம். சிறு, குறு விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் குறிப்பாக, கிராமப்புற பெண்கள் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க வேண்டும் என்பதற்காக, விலையில்லா 4 ஆடுகள் மற்றும் கறவைப் பசுக்கள் வழங்கும் திட்டம், 20 அசல் இன கோழிகள் வழங்கும் திட்டம், கோழிக் கூண்டுகள் வழங்கும் திட்டம், வறட்சிக் காலத்தில் கால்நடைகளுக்கு விலையில்லா தீவனங்கள் வழங்கும் திட்டம் என்று பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியதுடன், 5 புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு, கால்நடைத்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்ந்தது.
அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, விவசாயிகளின் உபதொழிலான கால்நடை வளர்ப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன், ஆசியாவிலேயே மிகப் பெரிய கால்நடைப் பூங்கா மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு பகுதியை நானே திறந்து வைத்தேன். 2021 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டதென்ற ஒரே காரணத்திற்காக, கிராமப்புற மக்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்திற்கு திமுக அரசு முற்றுப் புள்ளி வைத்தது.
இந்நிலையில், ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில், அரசு சார்பில் ஒரு கால்நடை கிளை நிலையத்தைக்கூட திறக்காத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் செலவிற்கு நிதி சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், இதை எதிர்த்து கால்நடை மருத்துவர்கள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.
ஆட்சி முடிவடையும் தருவாயில் சட்டத்தை வளைத்து, சுயலாபத்திற்காக கால்நடை மருத்துவக் கல்லூரிகள் துவக்க தனியார்களுக்கு அனுமதி அளிக்கத் துடிக்கும் முதல்-அமைச்சர் ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு ஒருசில அதிகாரிகள் துணைபோவதாகவும் செய்திகள் வந்துள்ளன. எனவே, உடனடியாக திமுக அரசு புதிய தனியார் கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிப்பதை கைவிட வேண்டுமென்றும், புதிய கால்நடை மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதாக இருந்தால், அரசின் சார்பில் துவக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன்.
தற்போதுள்ள கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைப் பணியாளர்களின் எச்சரிக்கையை மீறி, தனியாருக்கு கால்நடை மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதி வழங்கப்படுமானால், அதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது, மலர இருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
