ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டு தாக்குதலை தொடுத்து வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் தொடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களாக தாக்குதல் நீடித்து வரும் நிலையில் நேற்று அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதலை நடத்தியது. குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கியது.
அந்த வகையில் சவுதி அரேபியா மீது கொத்துக்கொத்தாக டிரோன்கள் வீசப்பட்டன. இதில் சுமார் 50 டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.ஓமனில் சுகர் பிராந்தியத்தில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வீசப்பட்ட 2 டிரோன்கள் தாக்கியதில் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் இருவர் கொல்லப்பட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர்.அவர்களும் இந்தியர்கள் என்பதை மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது. காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 5 பேர் சிகிச்சை முடித்து திரும்பியதாகவும் வெளியுறவு அமைச்சக இணைச் செயலாளர் அசீம் மகாஜன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பஹ்ரைனிலும் நேற்று பல முறை அபாய ஒலி எழுப்பி பொதுமக்களை எச்சரித்ததை காண முடிந்தது.அமீரகத்தின் துபாயில் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தபோது அவற்றின் பாகங்கள் தாக்கியதில் தொழில்துறை பிராந்தியம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பல அடி உயரத்திற்கு கரும்புகை எழுந்தது. மேலும் துபாய் சர்வதேச நிதி மையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றும் இவ்வாறு இடைமறிக்கப்பட்ட ஏவுகணை பாகங்கள் தாக்கியதில் சேதமடைந்தது.ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள வங்கி ஒன்று இந்த வார தொடக்கத்தில் தாக்கப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நிதி நிறுவனங்களை குறிவைத்து தாக்குவோம் என அந்த நாடு எச்சரித்திருந்தது. அதன்படி துபாயில் நேற்று இந்த தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
