சென்னை,
இலக்கியத்தில் மிக சிறந்த பங்களிப்பை வழங்குபவர்களுக்கு சாகித்ய அகாடெமி விருது வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கவிஞர் வைரமுத்துக்கு ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீடம் விருதை பெறும் 3வது தமிழர் என்கிற பெருமையை வைரமுத்து பெறுகிறார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் “நெடிய பரம்பரை கொண்ட தமிழிலக்கியத்துக்கு மூன்றாவது முறையாக உயரிய இலக்கிய விருதான ஞானபீடம் கிடைத்திருக்கிறது. ஜெயகாந்தன் பெற்ற முந்தைய ஞானபீடத்துக்குப் பிறகு, கால் நூற்றாண்டு கடந்து தமிழுக்கு இந்தப் பெரும்பெருமையைச் சேர்த்திருக்கிறார் என் ஆப்தர் கவிப்பேரரசு வைரமுத்து ‘வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்கிற கவிச் சொற்களோடு என் செவியில் விழுந்து இதயம் நுழைந்து நட்பில் கலந்த நண்பரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.” என்று தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்,
இந்திய சினிமாவின் பெருமைகளுள் ஒருவரான கமல்ஹாசன், தனது கலையுலகப் பங்களிப்பால் தொடர்ந்து வியக்க வைத்து வருகிறார். கமல்ஹாசன் மற்றும் வைரமுத்துவின் கூட்டணி தமிழ் சினிமாவுக்குப் பல காவியப் பாடல்களைத் தந்துள்ளது. “நாயகன்,” “அஞ்சலி,” “தேவர் மகன்,” “குருதிப்புனல்,” “விருமாண்டி” போன்ற படங்களில் அவர்களது கூட்டணி பல மறக்க முடியாத பாடல்களைப் படைத்துள்ளது. வைரமுத்துவின் கவித்துவமான வரிகளும், கமல்ஹாசனின் அசாதாரணமான நடிப்பும் இணைந்து, ஒவ்வொரு பாடலையும் ஒரு காவிய அனுபவமாக மாற்றின.
