தென்னிந்திய சினிமாவில் மட்டுமல்லாது, பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களிலும் தொடர்ந்து நடித்துவரும் நடிகை தமன்னா, திரையுலகில் கால் பதித்து கிட்டத்தட்ட இரண்டு சகாப்தங்கள் கடந்தபோதும் தனது கிரேஸை இழக்காமல் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். தற்போதுள்ள நடிகைகளுடன் போட்டியிட்டு நடிப்பதுடன், சிறப்புப் பாடல்கள் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தமன்னா ஒரு சிறப்புப் பாடலில் நடிக்க சுமார் ரூ. 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. தற்போது ‘புருஷன்’ படத்தில் நடித்துவருகிறார்.
தனியார் பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை தமன்னா கலந்துகொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் குறித்து தமன்னா பேசியவை இணையத்தில் வைரலாகி இருக்கின்றன.
மேடையில் பேசிய தமன்னா, “தற்போது ‘புருஷன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது, அதை பாதியிலேயே விட்டு விட்டு நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன். நான் முதன் முதலில் நடித்த ‘கல்லூரி’ திரைப்படம் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அந்தக் கதை கல்லூரி வாழ்க்கையை அடிப்படையாக கொண்டிருந்தது.கல்லூரியில் இருக்கும் ஒவ்வொரு தருணங்களையும் நீங்கள் என்ஜாய் செய்ய வேண்டும். இந்தக் காலம் உங்களுக்கு மீண்டும் கிடைக்காது. 21 வருடம் நான் சினிமாவில் இருக்கிறேன். நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு நன்றி” என்றார்.
விஜய் குறித்து பேசிய தமன்னா, “மிகவும் எளிமையான, மென்மையான மனிதர். நடனம் ஆடுவதில் அவரும், ஜூனியர் என்.டி.ஆரும் தான் சிறந்தவர்கள்” என்று கூறிருக்கிறார்.
அஜித் பற்றி சொல்லும்போது, “வீரம்’ திரைப்பட படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து எனக்கு இட்லி செய்து கொடுத்தார். அவருக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும். அவர் மிகவும் நல்ல மனிதர், மென்மையானவர், நல்ல குடும்பஸ்தர்” என புகழ்ந்து பேசியிருக்கிறார்.
