சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட தனிநபர் மற்றும் அமைப்புகளுக்கு, தமிழ்நாடு அரசின் ‘பசுமை சாம்பியன்’ விருதுகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேற்று வழங்கினார்.
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் அழகுமீனா, “தமிழ்நாடு அரசு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்த தனிநபர்கள் மற்றும் அமைப்புகளைக் கண்டறிந்து, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் ஆண்டுதோறும் 100 பேருக்கு ‘பசுமை சாம்பியன் விருது’ வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விருதுடன் தலா ரூ.1 லட்சம் பண முடிப்பும் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
2025-ம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதினைப் பெறத் தகுதி பெற்ற ஜெகதீசன் (தனிநபர் பிரிவு), இயற்கையே இறைவன் பனை விதைப்பு குழு (அமைப்பு), ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப்பள்ளி (கல்வி நிறுவனம்) ஆகியோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
விருது பெற்றவர்களை மனதாரப் பாராட்டிய மாவட்ட கலெக்டர், இனிவரும் காலங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடனும், சமூகப் பொறுப்புடனும் விழிப்புணர்வுப் பணிகளைத் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் நெல்லை மதி, பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
