தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் தலைமையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இணைந்த கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் கமலக் கண்ணன், இணைச்செயலாளர் சுஜாதா விஜயக்குமார், பொருளாளர் சுபாஷ் சந்திர போஸ், முன்னாள் தலைவர் கேயார், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் டி.ஜி.தியாகராஜன், செயலாளர் டி.சிவா, பொருளாளர் தனஞ்செயன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, ஐசரி கணேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அக்கூட்டத்தில், திரைத்துறையின் நலன் கருதி பல முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன. அதில், திரைப்படங்கள் வெளியீட்டுக்கும், ஓடிடி வெளியீட்டை முறைப்படுத்துவதற்கும் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழுஅமைப்பது என்றும், இந்த கூட்டுக்குழு எடுக்கும் முடிவுக்கு திரைத்துறையினர் கட்டுப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர், நடிகையர், இயக்குநர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் எந்த தயாரிப்பாளரிடம் முதலில் அட்வான்ஸ் வாங்குகிறார்களோ அவருக்கு முன்னுரிமை கொடுத்து திரைப்படத்தை முடித்துத் தர வேண்டும். திரைப்படங்களில் நடிக்கும் முன்னணி நடிகர், நடிகையர், இயக்குநர், தொழில்நுட்ப கலைஞர்கள், இணையதள தொடர்களில் நடிக்கவோ, இயக்கவோ செல்லக் கூடாது.
அவ்வாறு செல்லும் நடிகர், நடிகையர், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் திரைப் படங்களில் பணிபுரிய கூட்டுக்குழு எடுக்கும் முடிவுக்கு கட்டுப் பட வேண்டும் என்பது உள்பட சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
