சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வேட்டையன் பட்டியை சேர்ந்தவர் சரவணன் (வயது 45) இவர் தனியார் உணவு விடுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த சரவணன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டார். இந்தநிலையில் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சரவணன் நேற்றிரவு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடலை ஆம்புலன்ஸ் மூலம் சிங்கம்புணரி மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் 10-ம் வகுப்பு படிக்கும் அவரது மகனுக்கு இன்று பொது தேர்வு இருந்தது. இதனால் செய்வதறியாது திகைத்த மாணவனை உறவினர்கள் தேற்றி, தந்தையின் இறுதி சடங்குகளை செய்வதற்கு உறுதுணையாக இருந்தனர். பின்னர் தந்தையின் இறுதி சடங்குகளை முடித்து விட்டு 10-ம் வகுப்பு தேர்வு எழுத புறப்பட்டார். இந்நிகழ்வு அனைவரையும் கண்கலங்க வைத்தது.
சிங்கம்புணரி பேரூராட்சி துணை சேர்மன் இந்தியன் செந்தில் மாணவனை காரில் அழைத்து சென்று பள்ளி வளாகத்தில் குறித்த நேரத்தில் இறக்கி விட்டார்.
