காலையில் 'டீ’ கொடுக்காததால் மருமகளை வெட்டிக்கொன்ற மாமியார் – அதிர்ச்சி சம்பவம்

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கொட்டம்பரா கிராமத்தை சேர்ந்தவர் சுனில் பாபு. இவருக்கு திருமணமாகி ராஜிலா (வயது 28) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. சுனில் பாபுவின் தாயார் சாந்தாவும் (வயது 70) இவர்களுடன் வசித்து வந்தார். இதனிடையே, ராஜிலாவுக்கும் அவரது மாமியார் சாந்தாவுக்கும் அவ்வப்போது பிரச்சினை நிலவி வந்தது.

இந்நிலையில், சுனில் பாபு இன்று காலை 6.30 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது சாந்தா தனது மருமகள் ராஜிலாவிடம் ’டீ’ கொடுக்குமாறு கூறியுள்ளார். இதற்கு ராஜிலா மறுத்துள்ளார். இதனால் மாமியார் சந்தாவுக்கு மருமகள் ராஜிலாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சாந்தா வீட்டில் இருந்த அரிவாளால் மருமகள் ராஜிலாவை சரமாரியாக வெட்டினார். இதில், ராஜிலா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

தாயை பாட்டி அரிவாளால் வெட்டியதை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜிலாவின் குழந்தை அலறியுள்ளது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்துள்ளனர். அப்போது, ராஜிலா ரத்த வெள்ளத்தில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ராஜிலாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொலை குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று மருமகளை வெட்டிக்கொன்ற சாந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்த கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link