2 இந்திய கப்பல்கள் அனுமதிக்கு பதிலாக… ஈரான் வைத்த கோரிக்கை என்ன?

தெஹ்ரான்

மேற்காசிய மோதலால் ஈரானை ஒட்டிய ஹார்மூஸ் ஜலசந்தியை கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்கியதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது.

இந்த சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தியை ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய இந்திய கொடியுடன் கூடிய இரு கப்பல்களும் கடந்து செல்ல ஈரான் தரப்பில் அனுமதி அளிக்கப்பட்டது. ஈரான், இந்தியா நட்புறவு கொள்கை அடிப்படையிலான இந்த முடிவை தொடர்ந்து, இரு கப்பல்களும் பாதுகாப்பாக இந்தியாவை நோக்கி நேற்று முன்தினம் புறப்பட்டன.

Also Read
பாகிஸ்தானில் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து 8 பெண்கள் பலி

2 இந்திய கப்பல்கள் அனுமதிக்கு பதிலாக... ஈரான் வைத்த கோரிக்கை என்ன?

அந்த கப்பல்களில் 92 ஆயிரத்து 700 டன் எடை கொண்ட எல்.பி.ஜி. எனப்படும் திரவ நிலையிலான பெட்ரோலியம் கியாஸ் உள்ளது. 2 கப்பல்களும் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள கண்ட்லா துறைமுகத்திற்கு நந்தாதேவி கப்பல் இன்று மதியம் வந்தடைந்தது. இதேபோன்று, ஷிவாலிக் கப்பல் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.

இந்த நிலையில் 2 இந்திய கப்பல்கள் அனுமதிக்கு பதிலாக இந்தியாவிடம் ஈரான் வைத்த கோரிக்கை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. கடலில் சட்ட விரோத வகையில் பயணித்த 3 கப்பல்களை இந்தியா சிறை பிடித்தது.

இந்நிலையில், அந்த 3 கப்பல்களும் தன்னுடையவை என்று கூறி அவற்றை விடுவிக்கும்படி இந்தியாவிடம் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கப்பல்கள் தங்களுடைய அடையாளம் தெரியாத வகையில் மறைத்தும், மாற்றியும் செயல்பட்டன. அஸ்பால்ட் ஸ்டார், அல் ஜப்ஜியா மற்றும் ஸ்டெல்லார் ரூபி ஆகிய 3 கப்பல்களும் சட்டவிரோத வகையில், கப்பலில் இருந்து கப்பலுக்கு சில பரிமாற்றங்களை செய்தும், இயங்கியும் வந்துள்ளன.

இவற்றில், ஸ்டெல்லார் ரூபி கப்பல் ஈரான் கொடியுடனும், மற்ற 2 கப்பல்களும் நிகரகுவா மற்றும் மாலி நாட்டு கொடிகளுடனும் சென்றன. இதேபோன்று, சில வகை மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகளையும் வினியோகிக்கும்படி இந்தியாவிடம் கேட்டுள்ளது என ஈரான் அதிகாரி ஒருவர் கூறினார். இதற்காக, டெல்லியிலுள்ள இந்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகளை, ஈரான் தூதர் இன்று சந்தித்து பேசினார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source link