புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்றம் காணப்படுகிறது. வான், கடல் பயணங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் மற்றும் கத்தார் உள்ளிட்ட வளைகுடா பகுதியில் உள்ள நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை ஏற்றி கொண்டு 45 விமானங்கள் இந்தியாவுக்கு இன்று வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வளைகுடா பகுதிக்கான கூடுதல் செயலாளர் அசீம் மகாஜன் இன்று கூறும்போது, இதுவரை 2.2 லட்சம் இந்தியர்கள் வளைகுடா பகுதியில் இருந்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு திரும்பி வந்து சேர்ந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
கத்தார் நாட்டில் பகுதியளவு வான்வெளி திறந்துள்ளது. இதனால், அந்நாட்டில் இருந்து விமானங்கள் இயக்கப்படும் என கூறினார். மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் இன்று கூறும்போது, நில எல்லை வழியாக அர்மீனியா நாட்டுக்குள் 550 இந்தியர்கள் கடந்து சென்றுள்ளனர். ஈரானில் இருந்து நில எல்லை வழியாக அஜர்பைஜான் நாட்டுக்கு 90 இந்தியர்கள் பயணம் செய்து சென்றடைந்துள்ளனர் என கூறினார்.
குவைத்தின் வான்வெளி தொடர்ந்து மூடப்பட்டு காணப்படுகிறது. இதனால், சிறப்பு விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஹ்ரைன், ஈராக் பயணிகள் சவுதி அரேபியா வழியே வந்து சேர வசதி செய்யப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.
