கல்லீரல் தானம் செய்து தந்தையின் உயிரை காப்பாற்றிய இளம்பெண்… நெகிழ்ச்சி சம்பவம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் ஜகலூரை சேர்ந்தவர் அஜ்ஜப்பா(வயது 50). இவரது மகள் சந்தனா(வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வேளாண்துறை ஊழியரான அஜ்ஜப்பா மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த குடிப்பழக்கத்தால் அவருக்கு கல்லீரல் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தாவணகெரேயில் உள்ள தனியார் மருத்துவம்னையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அஜ்ஜப்பாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு ரூ.50 லட்சத்துக்கும் மேல் செலவாகும் என்று கூறினர்.

தனது தந்தையின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கருதிய சந்தனா, தன்னுடைய கல்லீரலை தானமாக வழங்க முன்வந்தார். இது பற்றி தனியார் மருத்துவமனை டாக்டர்களிடம் அவர் தெரிவித்தார். இதற்கு ஒப்புக்கொண்ட டாக்டர்கள், அறுவை சிகிச்சை மூலம் சந்தனாவின் 40-60 சதவீத கல்லீரலை அகற்றி, அஜ்ஜப்பாவுக்கு பொருத்தினர்.

இதன்மூலம் அஜ்ஜப்பா பழைய நிலைக்கு திரும்பினார். தந்தைக்கு கல்லீரல் தானம் செய்து உயிரை காப்பாற்றிய சந்தனாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link