சென்னை,
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 4.77 ஏக்கர் நிலத்தை சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடம் இருந்து 1988-ம் ஆண்டு மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கியுள்ளார். இந்த நிலையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரன் முதலியாரின் இரண்டாவது மனைவி, மகன் நடராஜன், மகள் சிவகாமி என மூன்று பேர் வாரிசு சான்றிதழ் பெற்று, சொத்தில் தங்களுக்கு பங்கு உள்ளது என கூறி செங்கல்பட்டு கூடுதல் செசன்சு கோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் அவரது மகள்களான நடிகைகள் ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் செங்கல்பட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த செங்கல்பட்டு கோர்ட்டு, முழுமையான விசாரணைக்கு பின்னரே, சொத்தின் உரிமை குறித்து முடிவெடுக்க முடியும் என்று கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் கூட்டாக சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.வி.தமிழ்செல்வி, இறுதி விசாரணைக்காக மனுவை வருகிற 26-ந்தேதிக்கு தள்ளி வைத்தார். அதுவரை செங்கல்பட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
