குளிர்காலத்தில் வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகளைக் கொண்டாட, இந்தியர்கள் அதிகம் இலங்கைக்கு பயணம் செல்ல முடிவு செய்கின்றனர். அதற்கான காரணங்கள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இலங்கை பயணம் ஏன்?
விசா செயலாக்க சேவைகளை வழங்கும் அட்லிஸ் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, இந்தியர்களின் பயணத் தேர்வுகளில் முக்கியமாக எளிதான விசா நடைமுறை, செலவு குறைவு மற்றும் புதிய அனுபவங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. வழக்கமாக தாய்லாந்து, துபாய், மலேசியா போன்ற நாடுகள் இந்தியர்களின் முதல் தேர்வாக இருந்தாலும், இந்த குளிர்காலத்தில் இலங்கையை நோக்கி அதிகமானோர் பயணத் திட்டங்களை வகுத்து உள்ளனர். இதற்குக் காரணமாக, அந்த நாட்டின் அருகாமை, செலவுச் சிக்கணம் மற்றும் பலதரப்பட்ட சுற்றுலா அனுபவங்கள் குறிப்பிடப்படுகின்றன.
விசா அனுமதி
அட்லிஸ் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, இலங்கைக்கு செல்ல விரும்பும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்து உள்ளது. இந்தியாவிற்கு மிக அருகில் அமைந்து உள்ள நாடாக இருப்பதால், குறுகிய நேர விமானப் பயணமே போதுமானதாக உள்ளது. மேலும், விசா அனுமதி நடைமுறையும் மிகவும் எளிதாக இருப்பதால், கடைசி நேரத்தில் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கும் இது ஒரு வசதியான தேர்வாக மாறி உள்ளது. பெரும்பாலும் ஒரு அல்லது இரண்டு நாட்களுக்குள் மின்னணு விசா அனுமதி கிடைப்பது, பயணத் திட்டங்களை விரைவாக செயல்படுத்த உதவுகிறது.
செலவு குறைவு
செலவை பொருத்தவரை, இலங்கை இந்தியர்களுக்கு ஒரு மலிவான சர்வதேச சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. தங்குமிடச் செலவுகள், உள்ளூர் போக்குவரத்து, உணவு மற்றும் சுற்றுலா இடங்களுக்கான கட்டணங்கள் ஆகியவை பல பிற நாடுகளை விட குறைவாக உள்ளன. இதனால் குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் பயணம் செய்யும் இந்தியர்களுக்கு இது பொருளாதார ரீதியாக ஏற்றதாக உள்ளது.
பாரம்பரிய சின்னங்கள்
இலங்கை கடற்கரைகள் பல்வேறு வகையான பயணிகளையும் கவரும் தன்மை கொண்டவை. அமைதியாக ஓய்வெடுக்க விரும்புபவர்களுக்கும், சர்ஃபிங், டைவிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபட விரும்பும் சாகசப் பயணிகளுக்கும் ஏற்ற இடங்கள் இங்கு உள்ளன. அதே நேரத்தில், பண்டைய கோவில்கள், யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள், அந்த நாட்டின் வளமான கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் வெளிப்படுத்துகின்றன.
America போகும் ஆர்வம் குறைந்து..மாற்றுவழி தேடும் இந்திய மாணவர்கள்
உணவு முறை
உணவு விஷயத்திலும் இந்தியர்களுக்கு நெருக்கமான அனுபவத்தை இலங்கை வழங்குகிறது. தேங்காய் பால் சேர்க்கப்பட்ட கறிகள், மசாலா வாசனை கொண்ட உணவுகள் மற்றும் புதிய கடல் உணவுகள் இந்திய சுவைக்கு நெருக்கமாக இருப்பதுடன், தனித்துவமான சுவை அனுபவத்தையும் தருகின்றன. இவ்வாறான பல காரணங்களால், இந்த குளிர்கால சுற்றுலா சீசனில் ஸ்ரீலங்கா இந்தியர்களின் முக்கியமான பயணத் தேர்வாக மாறி உள்ளது.
