சென்னை,
தமிழ்நாட்டில் 22,500-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்களின் கீழ், 4,474 தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளும், 23-க்கும் மேற்பட்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும், 1,454-க்கும் மேற்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர் கடன், நகை கடன், சுய உதவிக்குழு கடன், மாற்றுத்திறனாளி கடன், வாகன கடன் உள்பட பல்வேறு வகையிலான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேர்தல் நேர அறிவிப்பு
இதில், பயிர், கால்நடை வளர்ப்பு, மாற்றுத்திறனாளி உள்ளிட்ட பிரிவுகளில் வாங்கப்படும் கடன்களை குறிப்பிட்ட காலத்திற்குள் அடைத்துவிட்டால், 7 சதவீத வட்டி முழுமையாக தள்ளுபடி செய்யப்படுகிறது. மற்ற வகை கடன்களுக்கான வட்டி 9 சதவீதம் என்ற அளவில் தொடர்கிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 2 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த காலங்களில் தேர்தல் நேரத்தின்போது ஆளுங்கட்சியும், ஆண்ட கட்சியும், “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிக் கடனை தள்ளுபடி செய்வோம்” என்று வாக்குறுதி அளிப்பதும், ஆட்சிக்கு வருபவர்கள் அதை நிறைவேற்றுவதும் நடந்திருக்கிறது. ஒருசில நேரங்களில் அது நடைபெறாமலும் போய் இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி
தற்போது எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி, “அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட மாற்றுத்திறனாளி கடன், சிறுபான்மையினர் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளித்துள்ளார். ஆளுங்கட்சியான தி.மு.க.வும் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிலும், கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு நிச்சயம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கிக் கடன் அதிகரிப்பு
இந்த நிலையில், கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியிருக்கிறது.
கடந்த 2024-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரை ரூ.72 ஆயிரம் கோடியாக இருந்த கூட்டுறவு வங்கிக் கடன், 2025-ம் ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாத காலக்கட்டத்தில் ரூ.83 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.11 ஆயிரம் கோடி அதிகரித்து இருக்கிறது. தேர்தல் நேரத்தில் கூட்டுறவு கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கடன் வாங்கியதை இது காட்டுகிறது.
