2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு மிகவும் விறுவிறுவென நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற கட்சிகள் அனைத்திற்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் புதிய கட்சிகள் கூட்டணிக்குள் வந்துள்ளன. பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அனைவரும் கைகோர்த்து நிற்க வேண்டும். தவெக என்ற புதிய சக்தி தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறது. எனவே சற்று இறங்கி வந்து இணக்கமான போக்குடன் செயல்பட வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது வரை காங்கிரஸ் 28, ஐயுஎம்எல் 2, மதிமுக 4, மமக 2, கொமதேக 2 என தொகுதி பங்கீடு கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையில் கம்யூனிஸ்ட்கள், விசிக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியாக சென்று கொண்டிருந்தது. அதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உடன் திமுக தொகுதி பங்கீட்டை சற்றுமுன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, திமுக கூட்டணியில் சிபிஐக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ 6 தொகுதிகளில் நின்று 2ல் வெற்றி பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.
