வரும் சட்டமன்றத் தேர்தலில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட விரும்பும் நபர்களுக்கு இன்று முதல் விருப்பமனு விநியோகிக்கப்படும் என்று சசிகலா அறிவித்து உள்ளார்.
புதிய கட்சி தொடங்கிய சசிகலா
தொடர்ந்து மார்ச் 13 ஆம் தேதி கட்சியின் பெயரையும், கட்சியின் சின்னத்தையும் அறிவித்தார். அதன் படி, அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது கட்சியின் பெயராகவும், தென்னந்தோப்பு கட்சியின் சின்னமாகவும் அதிகாரப்பூர்வமாக்கப்பட்டது.
அஇபுதமமுக சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம்
மற்ற அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி உள்ள நிலையில், அஇபுதமமுக சார்பில் இன்று முதல் விருப்பமனு விநியோகம் தொடங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்து உள்ளார். அந்த அறிவிப்பில்,
மார்ச் 22 வரை விருப்பமனுக்களை வழங்கலாம்
நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோரும் கழக உடன்பிறப்புகளிடம் இருந்து இன்று (மார்ச் 18 ஆம் தேதி) காலை 11.00 மணி முதல் விண்ணப்பங்கள் பெறப்படும். மார்ச் 22 ஆம் தேதி இரவு 7 மணி வரை விண்ணப்பப் படிவங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம்.
அஇபுதமமுக பொதுச் செயலாளர் சசிகலா அறிவிப்பு
மற்ற அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி, விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். கழக உடன்பிறப்புகள் விண்ணப்பப் படிவங்களை போயஸ் கார்டன், ஜெயலலிதா இல்லத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சசிகலா அறிவித்தார்.
கட்டண விவரங்கள் வெளியீடு
மேலும், சட்டப்பேரவை தேர்தலுக்கான விருப்பமனுக்களுக்கு கட்டணம் குறித்தும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்து உள்ளது. அதில், நடைபெற உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி கோருவதற்கான விருப்பமனு விண்ணப்பக் கட்டணம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு:
- பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் – ரூ. 5,000
- தனித்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் – ரூ. 3,000
புதுச்சேரி:
- பொதுத்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் – ரூ. 3,000
- தனித்தொகுதிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1,000
என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
