பெங்களூரு ஓட்டல் பிஸினஸ்… சிலிண்டர் இல்லை, கரையும் ரூ.100 கோடி- வேலை பறிபோகும் அச்சம்! – bengaluru hotels facing losses and workers job fear due to lpg shortage

கர்நாடகா மாநிலத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நெருக்கடியாக மாறியிருக்கிறது. இதனால் 100 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்படும் எனவும், ஊழியர்களின் வேலை பறிபோகும் எனவும் அச்சம் ஏற்பட்டுள்ளது.

Bengaluru Hotels Cylinders Shortage(புகைப்படங்கள்Samayam Tamil)
பெங்களூரு நகரில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் பல கோடி ரூபாய் அளவிற்கு தினசரி வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த சூழலில் ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போரானது எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கேஸ் சிலிண்டர்கள் முன்பதிவு செய்தால் உடனடியாக கிடைக்கும் சூழல் இல்லை. நகர்ப்புறங்களில் 25 நாட்கள், கிராமப்புறங்களில் 45 நாட்கள் முடிந்த பின்னரே புக்கிங் எடுத்துக் கொள்ளப்படும் என்று ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன. இதில் கால இடைவெளி அதிகரிக்கப்பட்டது ஒருபுறம் என்றால், முன்பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் மக்கள் மறுபுறம் என்ற நிலை காணப்படுகிறது.

பெங்களூருவில் கேஸ் தட்டுப்பாடு

தற்போதைய சூழலில் வீடுகளுக்கு பெரிய நெருக்கடியை பார்க்க முடியவில்லை. உணவகங்கள், வர்த்தக நிறுவனங்களில் படிப்படியாக நெருக்கடி அதிகரித்து கொண்டிருக்கிறது. இது பெங்களூரு நகரிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் பல ஓட்டல்கள் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பல கோடி ரூபாய் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஓட்டல்கள் அடிக்கடி மூடப்படுவது, கேஸ் தட்டுப்பாடு ஆகியவை தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு சூழலை உருவாக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களில் தங்களின் மெனுவில் உள்ள உணவுகளின் எண்ணிக்கையை ஓட்டல்கள் குறைத்துள்ளன.

கேஸ் விலை உயர்வு : வருமானம் இல்லாதவங்க என்ன பண்றது? – கொதிக்கும் மக்கள்

ஓட்டல் தொழில் பெரிதும் பாதிப்பு

இதைப் பார்த்து விட்டு வாடிக்கையாளர்களும் குறைந்துவிட்டனர். பெங்களூருவில் தற்போதைய சூழல் தொடர்ந்து ஓட்டல் பிஸினஸ் 100 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என்று எச்சரிக்கின்றனர். இது ஓட்டல்களின் வருவாயில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் ஓட்டல் தொழிலுக்கு விழுந்துள்ள பெரிய அடி என்றே சொல்லலாம். இதுதொடர்பாக பெங்களூருவை சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் கூறுகையில், முன்பெல்லாம் ஒரே ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். சிலிண்டர்கள் எங்களை தேடி வந்துவிடும்.

கள்ளச்சந்தையில் சிலிண்டர் விற்பனை

ஆனால் தற்போது சிலிண்டர் புக் செய்ய திண்டாடுகிறோம். இந்த தட்டுப்பாட்டை பயன்படுத்தில் சிலர் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கின்றனர். நெருக்கடி அதிகரிப்பால் அதையும் வாங்க வேண்டிய நிலைக்கு சென்று விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கள்ளச்சந்தையில் 3,500 ரூபாய் என சிலிண்டர்கள் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது 6,000 ரூபாயை தாண்டிவிட்டதாக கூறுகின்றனர். ஓட்டல்களில் நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 சிலிண்டர்கள் வரை தேவைப்படுகின்றன. இப்படியான சூழலில் 6,000 ரூபாய் கொடுத்து ஒரு சிலிண்டரை வாங்க வேண்டும் என்றால் எப்படி சமாளிக்க முடியும் என்று வேதனை தெரிவிக்கின்றனர்.

கர்நாடகா அரசு உதவிக்கரம் நீட்டுமா?

மாற்று எரிசக்தியை நோக்கி ஓட்டல்கள் மாற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உதாரணமாக எலக்ட்ரிக் ஸ்டீமர்கள், ஓவன்கள், இண்டக்‌ஷன் குக்டாப் போன்றவற்றை பயன்படுத்தலாம். இதுதவிர பாரம்பரிய விறகடுப்பையும் கையில் எடுக்கலாம். மேலும் குப்பைகள் மூலம் தயாரிக்கப்படும் பயோ கேஸ் பயன்பாட்டை ஊக்கப்படுத்தலாம். இதன் தயாரிப்பில் கூடுதல் கவனம் செலுத்தலாம் என்கின்றனர். அரசு தரப்பில் கள்ளச்சந்தை விற்பனையை தடுக்க வேண்டும். வர்த்தக ரீதியில் எல்.பி.ஜி தேவையை பூர்த்தி செய்யும் முக்கியத்துவம் தடுக்கலாம் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.