மகா(ன்)பிரசாதம்: கங்கா ஸ்நானம்!
-ஜெயாப்ரியன்
தீபாவளியன்னிக்கு கங்கா ஸ்நானம் செய்யறது, மகோன்னத புண்ணியம்னு புராணங்கள் சொல்றது.
அன்னிக்கு எந்த ஜலத்துல நீராடினாலும் அதுல கங்கை ஆவிர்பவிச்சு இருக்கறதா ஐதிகம். அதேசமயம் கங்கை தீர்த்தத்துலயே ஸ்நானம் செய்யறதுங்கறது வேற. ரெண்டுமே விசேஷம்தான்னாலும், ரெண்டாவது கூடுதல் புண்ணியம்.
இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, பகவான் ஹரி, வாமனரா அவதாரம் எடுத்து, பலிகிட்டே தானம் வாங்கிண்டு, திரிவிக்ரமனா விஸ்வரூபம் எடுத்த சமயத்துல மேல் லோகத்துல இருந்து பிரம்மா பகவானோட காலை அலம்பிவிட்ட ஜலம்தான், கங்கை. அதை ஈஸ்வரன் தலையில தாங்கிண்டு இருக்கார். ஹரி, ஹரன் சம்பந்தம் அதான், கங்கை தீர்த்த ஸ்நான விசேஷம்.
அடுத்ததா, தீபாவளியன்னிக்கு தைலத்தை (எண்ணெய்) தேய்ச்சுண்டுதான் நீராடணும்னு வைச்சிருக்கா. இதுக்குக் காரணம், அன்னிக்கு நல்லெண்ணெய்ல மகாலக்ஷ்மி வாசம் செய்யறதாக புராணங்கள்ல சொல்லியிருக்கு. அதனால, நல்லெண்ணெயை வைச்சுண்டு, அரப்புப்பொடி தேய்ச்சுண்டு (ஸ்ரீரங்கத்துலயே ஸ்வாமிக்கு இப்படித்தான் நடக்கறது) வெந்நீர்ல ஸ்நானம் செய்யணும்.
இது எல்லாமே நம்மோட நன்மைக்குதான் சொல்லியிருக்கா. இந்த சீஸன்ல இன்னமாதிரி சீதோஷணம் நிலவும்னு தெரிஞ்சுண்டு, அந்த சமயத்துல நாம ஆரோக்யமா இருக்கணும்கறதுக்காகவே இதெல்லாம் வைச்சிருக்காங்கறதை புரிஞ்சுக்கணும்.
இன்னொரு முக்கியமான விஷயம். மத்த எந்தப் பண்டிகைக்கும் இல்லாத விசேஷம் தீபாவளிக்கு உண்டு. அது என்னன்னா, தீபாவளியில மட்டும்தான் தனக்கிட்டே இருக்கறதை மத்தவாளோட பகிர்ந்துக்கணும்கற உணர்வை வளர்க்கற மாதிரி, பலகாரங்களை பரஸ்பரம் பகிர்ந்துக்கற பழக்கம் அதிகமா இருக்கு.
வாழ்க்கை வெளிச்சமா இருக்கணும்னா இப்படி நல்ல குணங்கள் அவஸ்யம்தானே!
(பிரசாதம் மணக்கும்)

