பாலக்காடு – பொள்ளாச்சி – போத்தனூர் ரயில் பாதை இருவழித்தடமாக்குவது தொடர்பாக இறுதி இட ஆய்வுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி – கோவை தடம்
தற்போது மதுரை, திருவனந்தபுரம், சென்னை, திண்டுக்கல், திருச்செந்தூர், தென்காசி மற்றும் திருநெல்வேலி போன்ற முக்கிய நகரங்களை இணைக்கும் பல ரயில்கள் பொள்ளாச்சி – கோவை தடம் வழியாக இயக்கப்படுகின்றன. இந்தப் பாதை இப்பகுதியின் மிக முக்கியமான போக்குவரத்து இணைப்பாகத் திகழ்வதால், இங்கு நிலவும் நெரிசலைத் தவிர்க்க இருவழித்தடமாக்கல் அவசியம் என்று நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், பாலக்காடு – கொல்லங்கோடு – ஆனைமலை சாலை – பொள்ளாச்சி – கிணத்துக்கடவு – போத்தனூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்திற்கு இறுதி ஆய்வு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது இப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைமலை சாலை ரயில் நிலையம்
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆனைமலை சாலை ரயில் நிலையம் ‘கிராசிங்’ நிலையமாக தரம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. மேலும், கோவில்பாளையம் மற்றும் செட்டிபாளையம் ஆகிய பகுதிகளில் புதிய ரயில் நிலையங்களை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளதாகப் பொள்ளாச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ண பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டில் உள்ள பாலக்காடு – வாளையார் – மதுக்கரை – போத்தனூர் வழித்தடமானது அடர்ந்த வனப்பகுதிகள் வழியாகச் செல்கிறது. இதனால் அடிக்கடி யானைகள் இரயிலில் அடிபட்டு உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் அரங்கேறுகின்றன. புதிய இருவழித்தடத் திட்டம் பொள்ளாச்சி வழியாக அமைவதால், வனப்பகுதியைச் சார்ந்திருப்பது குறையும் என்றும், இதன் மூலம் வனவிலங்குகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் ரயில்வே ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
40 கிலோமீட்டர்
பொள்ளாச்சி வழியாகச் செல்லும் இந்தப் பாதை ஏற்கனவே உள்ள பாதையை விட சுமார் 40 கிலோமீட்டர் கூடுதல் தூரம் கொண்டதாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்துடன் தரம் உயர்த்தப்பட்ட தண்டவாளங்களில் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதன் காரணமாகப் பயண நேரத்தில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்று அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இருவழித்தடப் பணி முடிவடையும் போது, அதிகப்படியான பயணிகள் ரயில்களையும், சரக்கு ரயில்களையும் இயக்க முடியும். இது கேரளா மற்றும் மேற்குத் தமிழகத்திற்கு இடையேயான வணிகத் தொடர்பை வலுப்படுத்துவதோடு, பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் பெரும் ஊக்கமாக அமையும்.
