புதுச்சேரியிலிருந்து விலை உயர்ந்த மதுபாட்டில்கள் கடத்தல்

திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட வாளவாய்க்கால் பகுதியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை ஆய்வாளர் வள்ளி தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த காரை மறித்து காவல்துறையினர் சோதனை செய்தனர்.

இந்த நிலையில் அந்த காரில் ஒரு லட்சம் மதிப்பிலான 300க்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் இந்த காரில் பயணித்த மூன்று பேரை கைது செய்து மதுவிலக்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் நெடுவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குமார், அருண்குமார், மற்றும் பரவக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகிய மூன்று பேரும் காரைக்கால் மாவட்டம் வாஞ்சியூர் பகுதியில் இருந்து நெடுவாக்கோட்டை பகுதிக்கு வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்தது.

அதனை அடுத்து மூன்று பேரையும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த நிலையில் பாண்டிச்சேரி மாநில மது பாட்டில்களை கடத்தி வந்த தலைமை காவலர் கார்த்திகேயனை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட எஸ்பி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார் மேலும் இதே போன்ற சம்பவங்களில் ஈடுபடும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Source link