ஊழலற்ற ஆட்சியை உறுதியாக பேசிய முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம் – விஜய்யை புகழ்ந்து தள்ளிய காதர் மொய்தீன் – khader mohideen praises vijays corruption free governance promise

தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பதை வரவேற்ற ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன், எதிர்காலத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் சூழல் உருவாக வேண்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். போதை ஒழிப்பு என்பது அரசு நடவடிக்கையைத் தாண்டி சமூக மாற்றமாக அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ( ஐயூஎம்எல் ) மற்றும் ஒன் ஹெல்த் அமைப்பு சார்பில் நுரையீரல் பராமரிப்பு மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஐயூஎம்எல் தேசிய தலைவர் காதர் மொய்தீன் , பொதுச்செயலாளர் கே.எம். முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக போதை ஒழிப்பு மற்றும் நுரையீரல் பாதுகாப்பு குறித்த கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டது.

போதை பரவுவது திட்டமிட்ட வலையமைப்பு

நிகழ்வில் பேசிய ஐயூஎம்எல் பொதுச்செயலாளர் கே.எம். முகமது அபுபக்கர், சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவல்களை மேற்கோள் காட்டி, போதைப்பொருள் கடத்தலில் கமிஷன் முறை செயல்படுவதாகவும், பின்னர் அதையே உள்ளூர் விற்பனை வலையமைப்பாக மாற்றி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை குறிவைப்பதாகவும் கவலை தெரிவித்தார்.

மது ஒழிப்பில் தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கையை வரவேற்கிறோம்

தேசிய தலைவர் காதர் மொய்தீன் பேசுகையில், தமிழகத்தில் 700-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றார். எதிர்காலத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். கேரளாவில் தொடங்கப்பட்டுள்ள போதை மற்றும் மதுவுக்கு எதிரான இயக்கத்திற்கு தமிழக அரசும் ஆதரவு அளிப்பது பாராட்டத்தக்கது என்றும் கூறினார்.

“புதிய அரசுக்கு கால அவகாசம் தேவை”

செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொய்தீன், தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று இரண்டு மாதங்களே ஆன நிலையில், அதன் செயல்பாடுகளை மதிப்பிட அவசரப்படக் கூடாது என்றார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர் கூறியதுபோல், எந்த புதிய அரசுக்கும் குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்.

“ஊழலற்ற ஆட்சிக்கான உறுதிப்பாடு முக்கியம்”

ஊழல் முழுமையாக ஒழிந்துவிட்டதாக தற்போது கூற முடியாது என்றாலும், “ஊழலற்ற ஆட்சியை வழங்குவேன்” என்று வெளிப்படையாக உறுதியளித்த முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம் என்று காதர் மொய்தீன் கூறினார். அந்த உறுதிப்பாட்டின் அடிப்படையில் சில நல்ல மாற்றங்கள் தொடங்கியிருப்பதாகவும், மக்கள் அதனை நம்பத் தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.

அரசின் நடவடிக்கை மட்டும் போதாது

போதைப்பொருள் ஒழிப்பில் அரசு மட்டுமே செயல்பட்டால் போதாது; மக்களின் மனநிலையும் மாற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். விழிப்புணர்வு, சமூக அமைப்புகளின் பங்களிப்பு மற்றும் மருத்துவ வழிகாட்டுதலே போதை பழக்கத்திலிருந்து மீள உதவும் என்றார். நல்ல பழக்கங்களை உடலுக்கு கற்றுக்கொடுத்தால் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்றும் குறிப்பிட்டார்.

குற்றங்களின் பின்னணியில் போதை

கொலை, பாலியல் பலாத்காரம், திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களின் பின்னணியில் போதைப்பழக்கம் முக்கிய காரணமாக இருப்பதாக காதர் மொய்தீன் தெரிவித்தார். தேர்தல் காலங்களில் கூட மது வழங்கி வாக்குகளை பாதிக்கும் நடைமுறைகள் இருந்ததாக குறிப்பிட்ட அவர், போதை இல்லாத சமுதாயமே பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கும் என்றார்.

தமிழ்நாட்டில் ஊழல் விவகாரம் மற்றும் விவசாயிகள் பிரச்சனை!

தொகுதி மறுவரையறை

தொகுதி மறுவரையறை தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே மறுவரையறைமேற்கொள்ளப்படுவது தென் மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலை ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இந்த விவகாரத்தில் இறுதி முடிவை நாடாளுமன்றத்தில் உள்ள உறுப்பினர்களே எடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Source link