சென்னை,
சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்றத்தொகுதிகள் உள்ளன. இவற்றில், 28.30 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 4,079 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை உறுதி செய்யும் வகையில் 80 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு அளிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் 22,293 பேர் 80 வயதுக்கும் மேற்பட்டோர்களாக உள்ளனர். 12,347 மாற்றுத்திறனாளிகளும் உள்ளனர். இவர்கள் தபால் ஓட்டு செலுத்த தகுதி பெற்றவர்களாக உள்ளனர். மேலும், தேர்தல் பணிகளில் ஈடுபடும் போலீசார், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோர் தபால் ஓட்டு செலுத்த உள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘சென்னை மாவட்டத்தில் 60 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பேர் வரையில் தபால் ஓட்டு செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு வீடு, வீடாக சென்று தபால் ஓட்டு பதிவு செய்து பெறப்படும்’ என்றனர்.
