இந்தியா, இங்கிலாந்து அணிகள் முதல் இரண்டு போட்டிகளில் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என சமநிலையில் இருந்ததால், மூன்றாவது போட்டி பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த மூன்றாவது போட்டியில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 387/3 ரன்களை குவித்த நிலையில், இந்திய அணி, 50 ஓவர்களில் 360/7 ரன்களை எடுத்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியில், இந்திய அணி தோற்றப் பிறகு, கேப்டன் ஷுப்மன் கில் பேட்டிகொடுத்தார்.
அதில், ‘‘முதல் 45ஆவது ஓவர் வரை, இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருந்தது. பிறகு, கடைசி மூன்று ஓவர்களில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தோம். இந்த 3 ஓவர்களில் 60 ரன்கள் வரை விட்டுக்கொடுத்ததால்தான், இங்கிலாந்து அணியால் அதிக ரன்களை அடிக்க முடிந்தது’’ என கில் தெரிவித்தார்.
இங்கிலாந்து அணி, 47 ஓவர்கள் முடிவில் 325/3 ரன்களை எடுத்திருந்தது. பிறகு, குர்நூர் பிரார் 23 ரன்களையும், பிரசித் கிருஷ்ணா 23 ரன்களையும் விட்டுக்கொடுத்த நிலையில், கடைசி ஓவரில் பிரின்ஸ் யாதவ் 16 ரன்களை கசியவிட்டார். இப்படி, கடைசி மூன்று ஓவர்களில் 62 ரன்களை இங்கிலாந்து சேர்த்தது. இதைதான், தோல்விக்கு முக்கிய காரணம் என கில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஷுப்மன் கில், 388 ரன்களை சேஸ் செய்ய என்ன திட்டம் இருந்தது என்பது குறித்து பேசினார். அதில், ‘‘முதல் 40 ஓவர்கள் வரை அதிக விக்கெட்களை இழக்காமல் இருந்தே, வெற்றியைப் பெற்றுவிடலாம் என நினைத்தோம். இதனால்தான், நானும், ரோஹித்தும் துவக்கத்தில் பெரிய ஷாட்களுக்கு செல்லாமல், நிதானமாக ஆடினோம். குறிப்பாக, ரன்ரேட் 6, 6.30 என்ற அளவிலேயே வைத்துக்கொண்டு விளையாட முடிவு செய்தோம்’’
‘‘பிறகு, கடைசி 10 ஓவர்களில் 100, 110 ரன்களை அடிக்கும்போது, 7 விக்கெட்கள் கையில் இருந்தால், வென்று விடலாம் என முடிவு செய்தோம். இந்த திட்டத்தை, மனதில் வைத்துதான் விளையாடினோம். அதேபோல்தான் செயல்பட்டோம். ஆனால், வெற்றியைப் பெற முடியவில்லை’’ எனக் கூறினார்.
கில், கூறியதுபோலவே இந்திய அணி, முதல் 40 ஓவர்கள் முடிவில் 267/2 ரன்களை அடித்தது. கடைசி 10 ஓவர்களில் 121 ரன்களை அடிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. கையில், 8 விக்கெட்கள் இருந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், இஷான் கிஷன் 14 (12), ஷ்ரேயஸ் ஐயர் 0 (3), கே.எல்.ராகுல் 12 (8), அக்சர் படேல் 2 (3) போன்றவர்கள் பெரிய ஸ்கோரை அடிக்காமல் அவுட் ஆனார்கள். இவர்களில் ஒருவர் அதிரடி காட்டியிருந்தேலே இந்திய அணி வெற்றியைப் பெற்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.
கடைசி 6 ஓவர்களில் 84 ரன்கள்தான் அடிக்க வேண்டும் என்ற நிலைமை இருந்தது. மேலும், அப்போது, இந்திய அணியிடம் 6 விக்கெட்கள் இருந்த நிலையிலும், இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இதைதான், ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
இறுதியில், இந்திய அணி 1-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்தது. இதற்குமுன், டி20 தொடரையும் இந்திய அணி 0-4 என்ற கணக்கில் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
