தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா? சாத்தானின் ஆட்சியா? என விளாத்திகுளம் எம்எல்ஏ கைதை சுட்டிக்காட்டி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். மார்க்கண்டேயனுக்கு தரப்பட வேண்டிய மருந்துகளைக் கூட கொடுக்க அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ளார்.
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ கைது இதுதொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;ஜனநாயகப் பண்பு அறவே இன்றிச் செயல்படும் த.வெ.க. ஆட்சியில், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சியில் நடைபெறும் தவறுகளையும் அவலங்களையும் சுட்டிக்காட்டும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், இணைய ஆதரவாளர்கள் என்று, அனைவரையும் தொடர்ந்து, Take Diversion Model த.வெ.க. அரசு வேட்டையாடி வருகிறது.

நீதிமன்றத்தில் குட்டு வாங்கினீர்களே?“அவதூறு வழக்குகளில் கூட எதற்கு தொடர்பில்லாத குற்றப் பிரிவுகளைச் சேர்க்கிறீர்கள்?” என்று, நீதிமன்றத்திடம் சமீபத்தில் தானே குட்டு வாங்கினீர்கள்?கைது செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ, தனது வழக்கறிஞர் மற்றும் ஆதரவாளர்களைச் சந்திக்கக் கூட மறுக்கப்பட்டு உள்ளார். அவருக்கான மருந்துகளை வழங்க சென்றவர்களும் தடுக்கப்பட்டு உள்ளனர்.

கைது செய்யப்பட்டவரின் அடிப்படைச் சட்ட உரிமைகளும் மனித உரிமைகளும் கூட மறுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா?

சட்டப்படியும், மனசாட்சிபடியும்… மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்க வக்கற்ற த.வெ.க. அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறித் துடித்துக் கைது செய்வது ஏன்? ஆட்சியாளர்களின் சட்டத்துக்குப் புறம்பான உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி, அவர்களின் மனதைக் குளிர்விப்பது காவல்துறையினரின் பணி அல்ல. சட்டப்படியும் மனசாட்சிப்படியும் செயல்படுங்கள். இல்லாவிட்டால், there will be consequences.இவ்வாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
