எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது.. தீவிரவாதி போல் கைது பண்ணிருக்காங்க: கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் கொந்தளிப்பு – anitha radhakrishnan and geetha jeevan criticized dmk mla markandeyan arrest

முதல்வர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசுவதாக திமுகவை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இதே போன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பரபரப்பினை கிளப்பியது. இந்நிலையில் திமுக விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினர் மார்க்கண்டேயன் முதல்வர் விஜய் குறித்து மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளை கிளப்பி இருக்கிறது.

கோவில்பட்டியில் திமுக சார்பாக நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயின் கலந்து கொண்டு பேசினார். அப்போது சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கிண்டலடிக்கும் வகையில் விஜய் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மார்க்கண்டேயன் பேசினார். இது சம்பந்தமாக முதல்வரை மிரட்டும் தொனியில் பேசியதாக அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைதுக்கு திமுகவை சார்ந்த பலரும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்து கொண்டிருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகியோர் கைது செய்யப்பட்ட மார்க்கண்டேயனை சந்திக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இருவரும் ஆவேசமாக செய்தியாளர்களிடம் பேசினார்கள்.

அப்போது கீதா ஜீவன் பேசுகையில், எம்எல்ஏவை பார்க்க விட மாட்றாங்க. அனிதா ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி எம்எல்ஏ, பாளையங்கோட்டை எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் என்ற முறையில் நான் வந்துள்ளேன். எங்க யாரையும் பார்க்க விட மாட்றாங்க. அவர் எந்த நிலைல இருக்காருன்னு தெரியலை. காலைல கைது பண்ணதுல இருந்து போனை கூட கைல கொடுக்கலை. உதவியாளர், வழக்கறிஞர் என யாரையும் பார்க்க விடலை. எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாத மனிதர். அவருக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது.

சுகர், பிரஷர் என எல்லாம் உள்ளவரை அடைச்சு வைச்சுட்டு பார்க்க விட மாட்றாங்க. எங்கேயோ மேல இருந்து உத்தரவு வரனும் போல. நல்லா தெரியுது. இங்க எல்லாரும் கையாளகாதவங்களாக இருக்காங்க. நோட்டீஸ் எதுவும் கொடுக்காமல் கைது பண்ணி இருக்காங்க. இவ்வளவு பெரிய அராஜகம் நடப்பதை. ஆளுங்கட்சி ஆடுவதை மக்கள் தெரிஞ்சுக்கனும் என ஆவேசமாக பேசினார் கீதா ஜீவன். தொடர்ந்து அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், ஆதவ் அர்ஜுனன் முட்டாள் முதல்வர் என்று பேசினார்.

நாங்கள் கைது பண்ணோமா? இப்போ சாதாரண ஒரு பேச்சுக்கு நோட்டீஸ் கூட கொடுக்காமல் கைது செஞ்சு இருக்காங்க. இது நாடா இல்லை காடா? அதிகபட்சமாக இன்னும் நாலு மாசம் இந்த ஆட்சி இருக்கும். அதுவரைக்கும் தான் இந்த காவல்துறை ஆட முடியும். என்னை இடுப்பை பிடிச்சு ஒரு போலீஸ் இழுக்கிறார். என்னை தவெகவில் இணைய சொல்லி மிரட்டிய டிஎஸ்பி தான் இன்றைக்கு என்னோட இடுப்பை பிடிச்சு இழுத்தார்.

இன்றைக்கு வரைக்கு திருவைகுண்டம் எம்எல்ஏ மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தவெகவுக்கு ஒரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா என கடுமையாக கேள்விகளை முன்வைத்தார். தொடர்ந்து கீதா ஜீவன், தீவிரவாதியை போன்று கைது செஞ்சு இருக்காங்க. உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை என்றார். மேலும் தவெகவுக்கு ஒரு சட்டம், திமுகவுக்கு ஒரு சட்டம் இல்லை. எல்லாருக்கும் அரசியலைப்பு சட்டம் தான் எனவும் திட்டவட்டமாக பேசினார் கீதா ஜீவன்.

Source link