சென்னை,
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை காட்டும் வகையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாதவர்கள், ஆதார் அட்டை உள்பட 12 வகையான மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் எதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வ தற்காக புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு (பூத் சிலிப் பதிலாக வாக்காளர் தகவல் சீட்டை அச்சிட்டு வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. வாக்குச்சாவடியின் பெயர், வாக்குப்பதிவு நாள், நேரம் போன்றவை அதில் இடம் பெற்றிருக்கும்.
வாக்குப்பதிவு நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியால் வினியோகிக்கப்படும். என்றாலும், வாக்குச்சாவடி யில் வாக்காளர் தகவல் சீட்டு, அடையாளத்தை காட்டுவதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது. ஒரு வாக்காளர், வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால், அந்த அடையாள அட்டையையும் தேர் தல் கமிஷன் சுட்டிக்காட்டும் ஆவணமாக பயன்படுத்தலாம்.
ஆனால் அந்த வாக்காளருடைய பெயர், அவர் ஓட்டுபோட சென்றிருக்கும் வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண் டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது 12 அடையாள அட்டையில் எந்தவொரு அடையாள ஆவணத்தையும் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கை செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் அவர் ஓட்டுபோட உள்ள வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையை செலுத்த தகுதியுடையவர் ஆவார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 20ஏ-ன் கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், ஓட்டு போட அணுகும் வாக்குச்சாவடியில், அவர்களின் அசல் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாக கொண்டு (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் மெய்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
