திருவண்ணாமலை,
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வேட்டவலம் – திருவண்ணாமலை சாலையில் உள்ள வேளானந்தல் பகுதியில் நிலை கண்காணிப்புகுழுவினர் அதிகாலை வேளையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஜீனைத் பரூக் என்பவர் 53 வெண்கல சாமி சிலைகளை எடுத்து வந்தது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் சிலைகளை நிலை கண்காணிப்புகுழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் திருக்கோவிலூர் சாலை வெறையூர் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்து சென்ற 40 அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட 53 வெண்கல சாமி சிலைகள், அரிசி மூட்டைகள் ஆகியவை கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற தேர்தல் அலுவலரும், மாவட்ட கலால் உதவி ஆணையருமான க.செந்தில்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
