இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் வந்தப் பிறகு, மூன்று பார்மெட்டிலும் இந்திய அணி தொடர்ச்சியாக சொதப்பி வருகிறது.
டெஸ்ட் பார்மெட்டில் இருந்து சீனியர்களை ஓரங்கட்டிய நிலையில், உள்நாட்டு டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணி ஒயிட் வாஷ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து, டி20 பார்மெட்டிலும் சீனியர்களை ஓரங்கட்டிய நிலையில், அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் கூட, ஒரு வெற்றியைக் கூட பெற முடியவில்லை.
இந்நிலையில், தற்போது ஒருநாள் பார்மெட்டிலும் சீனியர்களை ஓரங்கட்டும் நிலையில், இங்கிலாந்து ஒருநாள் தொடரை இழந்துவிட்டனர். குறிப்பாக, ஒருநாள் அணியின் பந்துவீச்சு துறையில் சீனியர்களை முற்றிலும் ஓரங்கட்டிவிட்டனர். பும்ரா மட்டுமே இருக்கிறார். புதிதாக குர்நூர் பிராரை சேர்த்துள்ளனர். இவர், ரன்களை விட்டுக்கொடுப்பதில், ஹர்ஷித் ராணாவுக்கே டப் கொடுக்கிறார். குஜராத் டைடன்ஸை சேர்ந்தவர் என்பதற்காக, அணியில் இடம் கொடுத்திருப்பதாகவே கருதப்படுகிறது.
அடுத்து, பிரின்ஸ் யாதவ், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் போன்ற இளம் வீரர்களுக்குதான் இந்திய அணியில் இடம் கொடுக்கப்படுகிறது. மேலும், சுழற்பந்து வீச்சு துறையிலும், ரவீந்திர ஜடேஜாவை ஓரங்கட்டி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தருக்குதான் வாய்ப்பு கொடுக்கிறார்கள்.
தொடர்புகொண்ட சீனியர்கள்: இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்ததும், பிசிசிஐயை தொடர்புகொண்ட சீனியர் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோர், தங்களுக்கு மீண்டும் ஒருநாள் பார்மெட்டில் இடம் கிடைக்குமா? அல்லது ஓய்வை அறிவிக்கட்டுமா? எனக் கேடிருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து, பிசிசிஐ நடத்திய அவசர மீட்டிங்கில், இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, இதுகுறித்துப் பேசிய கம்பீர், ‘‘மீண்டும், இருவரையும் சேர்ப்பது கடினம். முகமது ஷமிக்கு மாற்றாக முகமது சிராஜ் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜாவுக்கு பதில் அக்சர் படேல் இருக்கிறார். இதனால், இவரையும் மீண்டும் சேர்ப்பது மிகமிக கடினம். தற்போது, இங்கிலாந்து ஒருநாள் தொடரில் இளம் பௌலர்களை ஆடவைக்க காரணம் இருக்கிறது. ஒருநாள் உலகக்கோப்பைக்கான அணியை தேர்வு செய்வதற்காக மட்டுமே இளம் பௌலர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம்’’
‘‘இளம் பௌலர்களுக்கு தற்போது வாய்ப்பு கொடுத்திருப்பதால், அவர்களே இனி ரெகுலராக ஆடுவார்கள் என அர்த்தம் கிடையாது. ஜஸ்பரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களின் இடம் மட்டுமே உறுதியாகியுள்ளது. ஹர்திக் பாண்டியாவும் இருக்கிறார். இன்னமும், ஒரு வேகப்பந்து வீச்சாளர் இடம்தான் காலியாக இருக்கிறது. அந்த ஒரு இடத்திற்கு இளம் வீரரை தேர்வு செய்யதான், தற்போது இளம் பௌலர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்கப்படுகிறது’’ என கம்பீர் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பேசிய கம்பீர், ‘‘ஒருநாள் உலகக் கோப்பை 2027 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வீரர்களை, வரும் நவம்பர் மாதத்தில் இருந்தே ரெகுலராக விளையாட வைக்க திட்டமிட்டுள்ளோம்’’ என கம்பீர் கூறியுள்ளாராம்.
அதுமட்டுமல்ல, தற்போது இருக்கும் இந்திய ஒருநாள் அணி பேட்டிங் வரிசையில், பெரிய மாற்றம் எதுவும் இருக்காது எனத் தகவல் வெளியாகி உள்ளது. இஷான் கிஷனை மட்டும் மாற்ற, அதிக வாய்ப்புள்ளதாம். இஷான் கிஷனுக்கு பதில் ரிஷப் பந்தை கொண்டு வரும் முடிவில், கம்பீர் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
