சென்னையில் காகங்கள் தொடர் இறப்பு: பறவை காய்ச்சல் உறுதியானதால் பொதுமக்கள் அச்சம்

சென்னை,

சென்னையில் கடந்த மாதம் அடையாறு இந்திரா நகர் பூங்கா மற்றும் நீலாங்கரை பகுதிகளில் காகங்கள் கொத்து கொத்தாக இறந்து கிடந்தன. தற்போது வரை, ஆங்காங்கே காகங்கள் இறக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இந்த காகங்கள் எச்5என்1 வைரஸ் தொற்று ஏற்பட்டு பறவை காய்ச்சலால் இறந்திருக்குமோ என்று பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில், இறந்த காக்கைகளை வெறும் கைகளால் தொடக்கூடாது என்று பொதுமக்களை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. மேலும், இறந்த காகங்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதே நேரத்தில், பொதுமக்கள் இறந்த காகங்களை எங்கு பார்த்தாலும் உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. எச்5 என்1 வைரஸ் தொற்று, அதாவது பறவை காய்ச்சல் ஏற்பட்டே இந்த காகங்கள் அனைத்தும் இறந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது மனிதர்களுக்கும் பறவிவிடக்கூடாது என்பதற்காக கால்நடைத்துறை சில முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை வெளியிட்டுள்ளது.

அதாவது, “இறந்த பறவைகளை கையால் தொடவேண்டும். உயிரிழந்த காகங்களை 8 முதல் 10 அடி ஆழத்தில் புதைக்க அல்லது எரிக்க வேண்டும். இதுவரை பறவை காய்ச்சலால் மனிதர்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் எச்சரிக்கை அவசியம்” கடந்த ஜனவரி மாதம் உயிரிழந்த காகங்களின் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link