திருட்டுத்தனமாக திரைப்படங்களை பதிவிட்ட 800 சோசியல் மீடியாக்கள், 3,142 டெலிகிராம் சேனல்கள் முடக்கம் 

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன் புதன்கிழமை அளித்த பதிலில் கூறியதாவது: திரைப்படங்கள் திருட்டுத்தனமாகப் படம் பிடிக்கப்படுவதைத் தடுப்பதற்கான சட்ட வழிமுறைகள், ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் 2023-இன் 6ஏஏ, 6ஏபி ஆகிய பிரிவுகளின் கீழ் வலுப்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பிரிவுகள் திரைப்படங்களை அனுமதியின்றி படம் பிடித்து பகிரப்படுவதைத் தடை செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் பிரிவுகளை யாராவது மீறினால், அவருக்கு அந்தச் சட்டத்தின் 7(1ஏ) பிரிவின் கீழ், குறைந்தபட்சம் 3 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் ரூ.3 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்தச் சிறைத் தண்டனையை 3 ஆண்டுகள் வரை நீட்டித்து, திரைப்பட தயாரிப்பின் மொத்த செலவில் 5 சதவீதத்தை அபராதமாக விதிக்க முடியும்.

இந்நிலையில், ஓடிடி தளங்கள், தயாரிப்பாளா்கள் உள்ளிட்டோருக்குச் சொந்தமான அல்லது உரிமம் பெற்ற பொருளடக்கங்களை, அவா்களின் அனுமதியின்றி பதிப்புரிமை சட்டம் 1957-ஐ மீறி வெளியிட்ட 3,142 சேனல்களை முடக்குமாறு தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 79(3)(பி)-இன் கீழ் டெலிகிராம் நிறுவனத்துக்கு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தெரியப்படுத்தப்பட்டது. இதே காரணத்துக்காக சுமாா் 800 வலைதளங்கள் இணையதள சேவை நிறுவனங்கள் மூலம் முடக்கப்பட்டன.இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Source link