"இந்தமாரி பண்ணாதீங்க சார்".. சி.வி.சண்முகத்தின் அவதூறு பேச்சுக்கு நடிகர் விஷால் கண்டனம்

சென்னை,

தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக – பா.ஜ.க அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தமிழகத்தில் பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அதாவது, முதல்வரின் ‘கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் குறித்து பேசியபோது, நடிகை ஒருவரை குறிப்பிட்டு சி.வி. சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பெரும் சர்ச்சையாக மாற, திரைத்துறை, அரசியல் துறை என பலரும் அவருக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “சி.வி.சண்முகம் சார், சமீபத்தில் உங்கள் கட்சி மீட்டிங்கில் எங்கள் துறையைச் சார்ந்த ஒரு பெண்மணி, ஒரு கதாநாயகி பற்றி நீங்கள் தரைக்குறைவாக பேசி இருக்கிறீர்கள். அவர் ஒரு நடிகை, அதுமட்டுமல்லாமல் அவர் திருமணமானவர். மேலும் இந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமானவர். ஒருத்தரை கொச்சைப்படுத்தி நீங்கள் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது.

ஆனால், இந்த மாதிரி மோசமான வார்த்தையை அந்த நடிகையைப் பற்றி பேசியது தவறு. நீங்கள் ரொம்ப தவறான வார்த்தையைப் பயன்படுத்தி இருக்கீங்க. தயவு செய்து உங்களோட மரியாதையை கெடுத்துக்காதீங்க. சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், அது மனதார வர வேண்டும். அது உங்களுக்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எங்கள் துறையைச் சார்ந்த எங்கள் பெண்மணிகள் குறித்து பேசுவது எங்களால் பொறுத்துக்க முடியாது. சக நடிகையாக இருக்கலாம், ஏன் உங்கள் கட்சியில் சார்ந்த ஒரு பெண்மணியாக கூட இருக்கலாம். அவர்களைப் பற்றி நீங்கள் இந்த மாதிரி பேசும் போது கண்டிப்பாக நான் மறுபடியும் பதிவிடுவேன். தயவு செய்து இந்த மாதிரி செய்யாதீங்க சார் இனிமேல்…” என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

Source link