தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, சில நாட்களுக்கு முன்பு ‘வி த லீடர்’ என்ற மக்கள் இயக்கத்தை தொடங்கியுள்ளார். அரசியல் கட்சியாக அல்லாமல், முதற்கட்டமாக மக்கள் இயக்கமாக செயல்பட உள்ளதாக அவர் அறிவித்திருந்தார். இருப்பினும், தொடக்கத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் இயக்கம் பல்வேறு சவால்களை எதிர்கொள்வதாகக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் அரசியல் பின்னணி
கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் இந்திய காவல் பணியில் (IPS) பணியாற்றிய அண்ணாமலை, தனது பதவியை ராஜினாமா செய்து, 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்து அரசியலுக்கு வந்தார்.
தமிழக பாஜகவை மாநில அரசியலின் மையப்புள்ளியாக மாற்றிய தலைவர்களில் அண்ணாமலையும் ஒருவர். அவரது தலைமையில் பாஜக பல்வேறு அரசியல் விவாதங்களின்மையமாக இருந்தது. மாநிலத் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பிறகு, தமிழிசை சௌந்தரராஜன் அல்லது எல். முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டதுபோல உயரிய பொறுப்பு அவருக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய எந்தப் பொறுப்பும் அவருக்கு கிடைக்கவில்லை.
மேலும், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை போட்டியிடுவார் என்றும், குறிப்பாக சிங்காநல்லூர் தொகுதியில் களமிறங்க விரும்புவதாகவும் பேசப்பட்டது. ஆனால், அவருக்கு அந்தத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்தச் சூழலில்தான் அவர் பாஜகவில் இருந்து விலகி தனி மக்கள் இயக்கத்தை தொடங்கியதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
‘ வி த லீடர்’ இயக்கத்தின் செயல்பாடுகள்
இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு இதுவரை ஒரு மாநில மாநாடு நடத்தப்பட்டுள்ளது. மேலும், போதைப்பொருள் ஒழிப்பை மையமாகக் கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துமாறு அண்ணாமலை நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் இயக்கத்தினர் மாரத்தான் ஓட்டம், விழிப்புணர்வு பேரணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். எனினும், இந்நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் வலுவான நிர்வாகக் கட்டமைப்பு இல்லாததால், அவை பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு கவனம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
உறுப்பினர் சேர்க்கையில் மந்தநிலை
இயக்கம் தொடங்கப்பட்டபோது, 50 லட்சம் உறுப்பினர்களை இணைப்பது இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதற்காக அண்ணாமலை நேரடியாக வீடியோ மூலம் அழைப்பு விடுத்தார். அதன் விளைவாக, ஜூன் 5ஆம் தேதி ஒரே நாளில் சுமார் 12 லட்சம் பேர் உறுப்பினர்களாக இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
பாஜகவை விட்டி விலகினார் அண்ணாமலை…அடுத்து இது தான்!
ஆனால், அதன் பின்னர் உறுப்பினர்சேர்க்கைவேகம் குறைந்துள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களில் ஆதரவு கிடைத்தாலும், கிராமப்புறங்களில் இயக்கத்தை கொண்டு செல்வதில் சிரமம் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அடிமட்ட நிர்வாகிகள் போதுமான அளவில் இல்லாததால், கிராமப்புறங்களில் தொடர்ந்து களப்பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
‘ சாஃப்ட்’ அரசியல் பலவீனமா ?
பாஜகவில் இருந்தபோது ஆக்ரோஷமான அரசியல் பாணியை பின்பற்றிய அண்ணாமலை, தற்போது மிதமான மற்றும் நாகரிகமான அரசியல் அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறார். ஆனால், அவரது இந்த மாற்றத்தை ஒரு பகுதி ஆதரவாளர்கள் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், மக்கள் இயக்கமாக வளர்ந்த பிறகே அரசியல் கட்சியாக மாற்றப்படும் என்ற அவரது அறிவிப்பும், ஏற்கனவே இணைந்த உறுப்பினர்களிடம் ஒரு விதமான சோர்வை உருவாக்கியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதன் காரணமாக, ‘வி த லீடர்’ இயக்கமும் பல சிறிய அரசியல் அமைப்புகளைப் போல ஆரம்ப உற்சாகத்திற்குப் பிறகு மங்கிவிடுமோ என்ற அச்சம் நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இந்தச் சூழலில், இயக்கத்தின் எதிர்காலம் குறித்த தெளிவான மற்றும் அதிரடியான முடிவுகளை அண்ணாமலை விரைவில் எடுக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
