நேற்று காலை திமுகவை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், முதல்வர் ஜோசப் விஜய்யை மிரட்டும் தொனியில் பேசியதாக கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கைக்கு எதிராக திமுகவை சார்ந்தவர்கள் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர். கைது என்ற பெயரில் எதிர்க்கட்சியினரை தவெக அரசு ஒடுக்குவதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த கைது நடவடிக்கை சம்பந்தமாக தற்போது பகிர்ந்துள்ள பதிவு கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
ஏற்கனவே திமுகவை சார்ந்த எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் முதல்வரை ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரை தொடர்ந்து விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏவான மார்க்கண்டேயன் சமீபத்தில் முதல்வரை மிரட்டும் தொனியில் பேசியதாக நேற்றைய தினம் காலை திடீரென கைது செய்யப்பட்டார்.
இது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது. அவதூறு வழக்கிற்காக கைது செய்யும் அடக்குமுறையை தவெக அரசு கையில் எடுத்துள்ளதாக திமுக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அரசியல் விமர்சகர்களும் அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் நடவடிக்கை தவெக அரசுக்கு நல்லதல்ல என கருத்து தெரிவித்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தி இந்து நாளேட்டின் தலையங்கத்தில் இந்த கைது நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்த ‘குற்றத்திற்காக’ ஆட்சிக்கு வந்த இரண்டு மாதங்களில் பத்து பேரை அவதூறு வழக்கில் தவெக அரசு கைது செய்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு நல்லதில்லை என விமர்சித்து கட்டுரையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தி இந்து நாளிதழின் இந்த கட்டுரையினை வெளியிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
அதில், ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை எல்லாம் கிரிமினல் சட்டப்பிரிவுகளைப் பயன்படுத்தி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுடைய போக்கினை தி இந்து நாளேட்டின் இன்றைய தலையங்கம் கடுமையாகச் சாடியுள்ளது. நம்முடைய முதல்வருக்கு புரிவதை போன்று சொல்ல வேண்டுமென்றால், இந்தியா முழுவதும் வெளியாகும் பத்திரிகையின் நடுப்பக்கம் அவரது தலையில் நங்கு நங்கென்று குட்டியிருக்கிறது என கடுமையான விமர்சனங்களை தனது பதிவில் முன்வைத்துள்ளார் மு.க. ஸ்டாலின்.
மேலும் ஆட்சியின் அலங்கோலங்களை எல்லாம் கைது நடவடிக்கை மூலமாக இந்த அரசு சரிக்கட்டி விடலாம் என்று எண்ணினால், அந்த ஆணவத்துக்கு மக்களே சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் எனவும் தன்னுடைய பதிவில் எச்சரித்துள்ளார். முன்னதாக எம்எல்ஏ மார்க்கண்டேயன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதற்கு, ஜனநாயகப் பண்புகள் அறவே இன்றி தவெக ஆட்சி செயல்படுகிறது என கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் மு.க. ஸ்டாலின்.
அதோடு தமிழ்நாட்டில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா, சாத்தானின் ஆட்சியா? மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர் மீதும், சொந்தக் கட்சி பெண் உறுப்பினரின் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குமே நடவடிக்கை எடுக்காத வக்கற்ற தவெக அரசு, அரசியல் விமர்சனங்களுக்கு மட்டும் அலறி துடித்துக் கைது செய்வது ஏன்? எனவும் கடுமையான கேள்விகளை மு.க. ஸ்டாலின் தன்னுடைய பதிவில் முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
