கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக திறக்காத நிலையில், தமிழக அரசு அதற்கு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை என திமுக முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ‘ஜனநாயகன்’ திரைப்படம் கர்நாடகாவில் எந்த பிரச்னையும் இன்றி வெளியாக வேண்டும் என்பதற்காகவே காவிரி விவகாரத்தில் அரசுமவுனமாக இருக்கிறதா என முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி நீர் விவகாரத்தை திரைப்பட வெளியீட்டுடன் தொடர்புபடுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
இது தொடர்பாக பனையூர் பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நீர் பகிர்வு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா ஆண்டுதோறும் தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி (TMC) நீரை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 9.19 டிஎம்சி நீருக்கு பதிலாக 2.91 டிஎம்சி மட்டுமே திறக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 6.28 டிஎம்சி நீர் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 31.24 டிஎம்சி நீரிலும் இதுவரை முழுமையான பங்கீடு நடைபெறவில்லை என்றும், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கான தமிழகத்தின் உரிய நீர் பங்கை கர்நாடகா இன்னும் முழுமையாக வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்
கர்நாடகா உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள பனையூர் பாபு, இந்த விவகாரத்தில் தமிழக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து கர்நாடகா மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீர் என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினை என்பதால், அதில் அரசியல் சமரசத்திற்கு இடமளிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
‘ஜனநாயகன்’ திரைப்படத்தை முன்வைத்து கேள்வி
அறிக்கையில், நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை திருவிழா போல கொண்டாடுமாறு பேசியதாக குறிப்பிட்டுள்ள பனையூர் பாபு, கர்நாடகாவில் திரைப்படம் எந்த சிக்கலும் இல்லாமல் வெளியாக வேண்டும் என்பதற்காகவே காவிரி விவகாரத்தில் அரசு அமைதியாக இருக்கிறதா என்று முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தமிழகத்தின் உரிமையான காவிரி நீரைப்பெற வேண்டிய நேரத்தில், திரைப்பட வெளியீட்டுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறதா?” என்றும் அவர் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
உடனடி நடவடிக்கைக்கு கோரிக்கை
ஜனநாயகன் திரைப்பட வெளியீட்டை காத்திருக்காமல், ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு கர்நாடகா வழங்க வேண்டிய காவிரி நீரை முழுமையாக பெற்றுத்தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனையூர் பாபு வலியுறுத்தியுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் பணம் கொடுக்காமல் ஜெயிக்க முடியுமா? சரமாரி கேள்வி கேட்ட TVK MLA
இதனிடையே, பனையூர் பாபு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் ரீதியாக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாகவும், அவர் எழுப்பிய கேள்விகள் தொடர்பாகவும் தமிழக அரசு அல்லது நீர்வளத்துறை சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ பதில் வெளியாகவில்லை.
Source link
