தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக இடையிலான தொகுதிகளை இறுதி செய்வதற்காக இன்று டெல்லிக்கு செல்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இது சம்பந்தமாக அமித்ஷாவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்நிலையில் என்டிஏ கூட்டணியில் புதிய நீதிக்கட்சி ஐந்து இடங்களை கேட்டு கோரிக்கை வைத்துள்ளது.
இபிஎஸ் டெல்லி பயணம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னைக்கு பயணமாகியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேசுவதற்கு, அவர் டெல்லிக்கு கிளம்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இபிஎஸ் டெல்லிக்கு செல்வதற்கு முன்பாக புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் அவரை சந்தித்து பேசியுள்ளார்.
புதிய நீதிக்கட்சி ஏ.சி. சண்முகம்
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை வகித்து வரும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அரசியல்ரீதியாக பேசிவிட்டு வந்தோம். ஐந்து தொகுதிகளை புதிய நீதிக்கட்சிக்கு வழங்குமாறு கேட்டுள்ளோம். பாஜகவிடம் பேசிவிட்டு, முடிவெடுத்து சொல்றோம் என தெரிவித்து இருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ன முடிவு எடுக்குதோ, அதுக்கு கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார் ஏ.சி. சண்முகம்.
சட்டமன்ற தேர்தல் தேதி குறித்தான அறிவித்து வெளியானதை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி, தொகுதி பங்கீடு சம்பந்தமான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்த வேலையை முடித்து விட்டு, அடுத்ததாக பிரச்சாரத்தில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளன. இந்நிலையில் திடீரென இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஆபாசங்களை அவதூறுகளையும் அள்ளி இறைக்கிறார்கள்.. அதிமுகவினரின் வரம்பு மீறிய பேச்சு.. முதல்வர் கடும் கண்டனம்
அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசவுள்ளார் இபிஎஸ். தொடர்ந்து அதிமுக, பாஜக இடையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால், இன்னமும் இறுதி முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. இந்த நெருக்கடி சூழ்நிலையில் தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி . இந்த சந்திப்பின் மூலமாக அதிமுக, பாஜக இடையிலான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதனிடையில் என்டிஏ கூட்டணியில் பாஜகவிற்கு 29 இடங்கள் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது அதனை விட கூடுதலாக ஒரு சீட்டை அதிமுகவிடம் பாஜக பெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நாளை தொகுதி பங்கீடு சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் சிக்கல்
பாஜக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் இணைந்து இபிஎஸ் நாளை பாஜகவுக்கு வழங்கப்படவுள்ள தொகுதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. இதனிடையில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விசிகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்த சிக்கலும் சீக்கிரமே நிறைவுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
