சமீபத்தில் தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதற்கு தவெக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது சம்பந்தமாக பல விதமான விமர்சனங்கள் எழுந்தது. அதோடு ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என அன்புமணி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் தவெக அமைச்சர் விக்னேஷ், ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி அளிப்பதாக வெளியான தகவல்கள் குறித்து புதிய விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெகவின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக விக்னேஷ் உள்ளார். டாஸ்மாக்கில் எம்ஆர்பி விலையை விட கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்து உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சீக்கிரமே தீர்வு காணப்படும் என அமைச்சர் விக்னேஷ் தொடர்ச்சியாக கூறி வருகிறார். இதற்கிடையில் தமிழ்நாட்டில் ரெஸ்டோ பார்கள் செயல்பட அனுமதி அளிக்க அரசு பரிசீலனை செய்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா அண்டை மாநிலங்களில் உணவகங்களுடன் கூடிய ரெஸ்டோ பார்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதே போல் தமிழ்நாட்டிலும் செயல்பட அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது. இது தவெக அரசுக்கு எதிராக சில விமர்சனங்களையும் உண்டாக்கியது. இதனையடுத்து அமைச்சர் விக்னேஷ் ரெஸ்டோ பார்க்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இந்நிலையில் இவ்விவகாரம் சம்பந்தமாக அமைச்சர் விக்னேஷ் மீண்டும் விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார். அதாவது செய்தியாளர்களிடம் இது தொடர்பாக பேசிய அவர், இந்த துறையில் இப்போ கூட பல ஒயின்ஷாப் கடைகள் பக்கமாக சென்று நீங்க பார்த்தீங்கன்னா, அங்க சண்டை போட்டுட்டு இருப்பாங்க. நூறு கை உள்ளே இருக்கும். சேல்ஸ் மேன் பனியன் போட்டு அங்க இருப்பார். அப்பறம் கடைக்கு முன்னாடி குப்பை மேடாக காட்சி அளிக்கும்.
ரெண்டு பேர் கீழ படுத்து இருப்பாங்க. இதை எப்படி பார்க்குறீங்க. கண்டுக்காமல் போக சொல்றீங்களா? இப்படியே மெயின்டெயின் பண்ணலாம் சொல்லி போக முடியுமா. எனவே இந்த துறையை சரி செய்ய வேண்டும். சீரமைக்கனும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டுமென்று தான் முயற்சி செய்கிறோம். அதற்காக நடந்த விவாதத்தில் எங்களுக்குள் நாங்கள் பேசிக்கும் போது, சிலர் ரெஸ்டோ பார் மாற்றலாமான்னு சொன்னாங்க. பிரைவேட்டுக்கு கொடுக்கலாமா என்றார்கள். சிலர் டாஸ்மாக்கின் உள்கட்டமைப்பை மாற்றலாமா என்று கேட்டார்கள்.
மேலும், டாஸ்மாக்கையே எடுத்துடலாமா என்றும் சொன்னார்கள். இப்படி எங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலில் யாரோ ரெஸ்டோ பார் என்ற வார்த்தையை மட்டும் கேட்ச் பண்ணிட்டார்கள். அதை வந்து வெளியே சொல்லியுள்ளார்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். இதன் மூலமாக ரெஸ்டோ பார் மட்டுமல்லாமல் தனியாருக்கு கொடுப்பது, டாஸ்மாக்கை முற்றிலுமாக எடுப்பது குறித்து அமைச்சர் விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துரையாடல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.
இதனிடையில் டாஸ்மாக் கை தனியாரிடம் கொடுப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக விக்னேஷ் தெரிவித்துள்ளது பெரியளவில் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. முன்னதாக ரெஸ்டோ பாருக்கு அனுமதி அளிப்பது குறித்து வெளியான தகவல்களுக்கு, அது சம்பந்தமாக எவ்விதமான அறிவிப்பையும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். அதோடு துறையை சீரமைப்பதற்கு சில ஆலோசனைகள் மற்றும் விவாதங்கள் நடந்ததாகவும் ஏற்கனவே அவர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
