பாடகர் அறிவு கைது மூலம் கவலைக்குரிய செய்தி: தவெக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் – dmk udhayanidhi stalin condemns tvk government regarding singer arivu arrested

நீட் தேர்வுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் மாணவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். இது நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ள நிலையில், ராப் பாடகர் தெருக்குரல் அறிவு தலைமை செயலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில் அவருடைய கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தகுதி தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் ஆகியவற்றுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள் தொடர் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். இதனிடையில் நேற்றைய தினம் போராட்டாக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.

இந்த சம்பவம் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை கிளப்பியது. இதனை தொடர்ந்து மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் திரையுலகினர் உள்ளிட்டோர் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கடுமையான கண்டனங்களை பதிவு செய்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் ராப் பாடகர் தெருக்குரல் அறிவு திடீரென தலைமை செயலகம் வந்தார்.

அங்கு நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் பாடகர் அறிவு உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதோடு செய்தியாளர்களிடம் மாணவர்களை அடிக்கக்கூடாது. அவர்களை அடிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் தெருக்குரல் அறிவு தெரிவித்தார்.

இந்நிலையில் அவருயைய கைதுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில், நீட் (NEET) தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காக, ராப் பாடகரும் எனது அன்புச் சகோதரருமான ‘தெருக்கூரல்’ அறிவு கைது செய்யப்பட்டுள்ளதற்கு விஜய் தலைமையிலான தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தன்னுடைய பதிவில் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

அவருடைய குரல் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்திய முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும், கோரிக்கைகளையும் பிரதிபலிக்கிறது. நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும், பேரணிகளும் தீவிரமடைந்து வருகிறது. இந்த வேளையில் தவெக அரசு தெருக்குரல் அறிவை கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நீட் தேர்வினை எதிர்த்து டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக தாங்களும் வீதிக்கு வந்து போராட திட்டமிட்டுள்ள தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இது ஒரு கவலைக்குரிய செய்தியை அளிக்கிறது என விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்து அவருடைய பதிவில், நீட் தேர்வில் முரண்பாடுகள் நிறைந்தது மட்டும் இல்லை. இது ஒரு முறைகேடான மோசடியாகவும் மாறியுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக எழுப்பபடும் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது. மாறாக அவை செவிமடுக்கப்பட வேண்டும். இவ்வாறு தன்னுடைய பதிவில் தெருக்குரல் அறிவு கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்திற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

Source link