அதிமுகவின் நிபந்தனைகளுக்கு அடி பணியுமா பாஜக? முக்கிய கோரிக்கைகள் என்னென்ன? என்பது தொடர்பாக இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
தொகுதி பங்கீடில் இழுபறி
இந்தச் சூழலில், தொகுதிப் பங்கீடு தொடர்பான இழுபறிகளை நேரடியாகப் பேசித் தீர்ப்பதற்காக எடப்பாடி பழனிசாமி அவசரப் பயணமாக டெல்லி சென்றுள்ளார். அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேச உள்ள அவர், தனது 170 தொகுதிகள் திட்டத்திற்கு பாஜக தலைமையின் சம்மதத்தைப் பெற முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தொகுதிப் பங்கீட்டில் கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் அதிமுகவின் கணக்கிற்குச் சவாலாக அமைந்துள்ளன. பாஜக தரப்பில் குறைந்தது 30 தொகுதிகள் கோரப்படுவதாகவும், பாமக தரப்பு 17 இடங்களை எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அமமுக மற்றும் இதர கட்சிகளுக்கு 20 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் எனப் பேச்சுக்கள் அடிபடுகின்றன. இந்த முரண்பட்ட எண்ணிக்கையினால் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைவதே எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.
சின்னம் தொடர்பான மோதல்
மற்றொரு புறம், சின்னம் தொடர்பான மோதலும் இக்கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. புதிய நீதிக் கட்சி, ஐஜேகே, புரட்சி பாரதம், தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் மற்றும் ஜான் பாண்டியனின் கட்சி போன்ற சிறிய கட்சிகளைத் தங்களது ‘தாமரை’ சின்னத்தில் போட்டியிட வைக்க பாஜக மேலிடம் காய் நகர்த்தி வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்திக் காட்ட டெல்லி தலைமை விரும்புகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக எடப்பாடி பழனிசாமி ஒரு தந்திரமான வியூகத்தை வைத்துள்ளார். சிறிய கட்சிகள் அனைத்தும் அதிமுகவின் ‘இரட்டை இலை’ சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று அவர் நிபந்தனை விதிக்கிறார். சிறிய கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில் நின்றால் மட்டுமே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பது அதிமுகவின் வாதம். அதே சமயம், அவர்கள் தாமரை சின்னத்தில் நின்றால் அது அதிமுகவின் ஒட்டுமொத்த பலத்தைக் குறைத்துவிடும் என்றும் அவர் கருதுகிறார்.
அமித் ஷாவுடனான சந்திப்பு
அமித் ஷாவுடனான இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதப்படுகிறது. தனது கட்சியின் வாக்கு சதவீதத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளுக்கு அடிபணியுமா அல்லது ஒரு சமரசத் திட்டத்தை முன்வைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அதிமுகவின் 170 தொகுதிகள் என்ற இலக்கும், சிறிய கட்சிகளின் சின்னம் தொடர்பான பிடிவாதமும் இறுதி செய்யப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. டெல்லி பயணத்தின் முடிவில் எட்டப்படும் முடிவுகளே தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியின் எதிர்காலத்தையும், தேர்தல் வெற்றி வாய்ப்புகளையும் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
