பாஜக அரசை பகைத்துக் கொள்வதாகிவிடும் என்ற அச்சமா? தவெக அரசுக்கு திமுகவில் இருந்து வந்த கண்டனம் – dmk udhayanidhi stalin and kanimozhi condemns tvk government

டெல்லியில் மாணவர்கள், இளைஞர்கள் நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக முன்னெடுத்துள்ள போராட்டம், நாடு முழுவதும் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதனையடுத்து டெல்லியில் நடக்கும் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் விதமாக பிற மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருவது பரபரப்பினை கிளப்பியுள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சார்ந்தவர்கள், இளைஞர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயற்சித்த நிலையில், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தடியடி நடத்தினார்கள்.

இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தமிழ்நாட்டில் கரப்பான் பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் போராட்டம் நடத்தியவர்களுக்கு அனுமதி மறுத்து, அவர்களை குண்டு கட்டாக கைது செய்தனர். இதற்கு கடுமையான கண்டனங்கள் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதில், நீட் தேர்வுக்கு எதிராக சென்னை எழும்பூர் மற்றும் மதுரை தமுக்கம் பகுதிகளில் போராடிய SFI மற்றும் DYFI அமைப்பை சார்ந்தவர்களை காவல்துறை மூலமாக வலுக்கட்டாயமாக கைது செய்யும் சோஃபா மாடல் அரசை வன்மையாக கண்டிக்கிறேன். CJP முன்னெடுப்பில் டெல்லியில் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக, தமிழ்நாட்டில் போராடும் நபர்களை கைது செய்வது என்பது, நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போராட்டத்தை தனக்கு எதிரான போராட்டமாக கருதி முடக்கும் இந்த அடக்குமுறையை, சோஃபா மாடல் அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனடியாக கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பதிவில் கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

இதே போல் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் டெல்லி மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தில் போராட்டத்தில் காவல்துறையின் வன்முறையை கண்டித்து, சென்னை – எழும்பூர் பகுதியில் போராட்டம் செய்த SFI மற்றும் DYFI அமைப்பினை சார்ந்த இளைஞர்களை கைது செய்திருக்கும் தவெக அரசுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவருடைய பதிவில், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் போராடுபவர்கள் அனுமதிப்பது கூட பாஜக அரசை பகைத்து கொள்வது ஆகிவிடும் என்ற அச்சத்தில் தான், இங்கு போராடியவர்களை தவெக அரசு வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளதா? எனவும் தன்னுடைய பதிவில் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link