சென்னை,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,’உடலினை உறுதி செய்’ என்ற தலைப்பில் விளையாட்டை மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
விளையாட்டு உடலை உறுதியாக வைத்துக்கொள்ள உதவுகிறது. வாழ்க்கையில் அனைத்து தடைகளை எதிர்கொள்ளும் ஆற்றலையும் வழங்குகிறது. ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட், சென்னை கண்ணகி நகரை சேர்ந்த கார்த்திகா ஆகியோர் தனி ஒரு ஆளாக தன் தாய் நாட்டின் பெயரை ஒரே ஒரு விளையாட்டு மூலம் உலகறியச் செய்தனர். அதே போன்ற நம்பிக்கை இளைஞர்களின் மனதில் இருந்தாலும் அதற்கான வசதி வாய்ப்புகள் அவர்களுக்கு போதிய அளவில் கிடைப்பதில்லை. தற்போது 38 மாவட்டங்கள் உள்ள தமிழகத்தில் விளையாட்டு, கல்வி மேம்பாட்டு ஆணையத்தின் மாணவ, மாணவிகள் தங்கும் விடுதி 27 மட்டுமே உள்ளது. இது போதுமானது அல்ல அனைத்து மாவட்டங்களிலும் தங்கும் விடுதி தங்கும் விடுதியுடன் விளையாட்டு பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும்.
சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக் கழகம் தொடங்கப்படும். இந்த பல்கலைக் கழகத்தில் பன்னாட்டளவில் சிறந்த விளையாட்டு பயிற்சிகளும், உலகத் தரத்திலான பயிற்றுநர்களும் பணியமர்த்தப்படுவார்கள். விளையாட்டு துறைகளில் உயர் ஆராய்ச்சி படிப்புகளும் மேற்கொள்ளப்படும். இந்த பல்கலைக் கழகம் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தைவிட சிறப்பான கட்டமைப்பை கொண்டதாக அமைக்கப்படும். இந்த விளையாட்டு பல்கலைக்கழகத்தில் விளையாட்டு துறையில் வென்று சிறப்பு தகுதி பெற்ற மருத்துவர்கள், இயன் முறை மருத்துவர்கள், சிறப்பு மருத்துவமனை, அதற்கான ஊழியர்கள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்.
இப்படியான வசதி வாய்ப்புகளை கொடுத்துவிட்டால் விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் சிறந்த வீரர்களாக விளங்குவார்கள். பன்னாட்டளவில் விருதுகளை பெறக் கூடியவர்களாகவும் மாறுவார்கள். விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறையில் வேலை வாய்ப்புக்கான இடப்பகிர்வு இப்போது 3 விழுக்காடாக உள்ளது. நாம் தமிழர் ஆட்சியில் அது 5 விழுக்காடாக உயர்த்தப்படும். மாநில, தேசிய, பன்னாட்டு விளையாட்டுகளை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்கும் அதே வேளையில் 120-க்கும் மேற்பட்ட தமிழர் மரபு விளையாட்டுக்களையும் மீட்டெடுக்க தனித்துறை அமைக்கப்படும். நமது மரபு விளையாட்டுகளில் சிலம்பமும், கபடியும் மட்டுமே இப்போது பன்னாட்டு விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்று உள்ளது. இதில் மேலும் தகுதியுடைய விளையாட்டுக்களையும் சேர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.
உயர் விருதுகள்:- தமிழ் மீட்சி என்ற பெயரில் தமிழ் மொழியை காப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட உள்ளன. தன் வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அரும்பாடுபட்ட மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர், மறைமலை அடிகளார், பரிதிமாற் கலைஞர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசனார், சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞானம், சி.பா. ஆதித்தனார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம், பாவலரேறு பெருஞ்சித்திரனார் போன்ற தமிழ் அறிஞர்களின் நினைவை போற்றும் வகையில் அவர்களின் பெயரில் உயர் விருதுகள் தமிழ் சான்றோர்கள், அரும்பணி ஆற்றியவர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
