அன்னா ஹசாரேவுக்கு ஓடோடி சென்று ஆதரவு கொடுத்த சிஎம் சார்.. மௌனம் காப்பது ஏன்? அப்பாவு அடுக்கடுக்கான கேள்வி – dmk appavu criticizes cm vijay for not condemning the attack on students in delhi

டெல்லியில் மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிராக நேற்றைய தினம் பிரதமர் மோடி வீட்டிற்கு முன்பாக ராகுல் காந்தி, இந்திரா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள். இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். குறிப்பாக நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குண்டுக்கட்டாக கைது செய்யப்பட காட்சிகள் பெரியளவில் இணையத்தில் வெளியாகி கவனம் ஈர்த்தன.

இதனிடையில் ராகுல் காந்தி கைது மற்றும் டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஜோசப் விஜய் கண்டனம் எதுவும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு தவெக கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கைதுக்கு எந்த கருத்தும் முதல்வர் கூறாமல் இருக்கிறாரே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் சபாநாயகர் திமுகவை சார்ந்த அப்பாவு தனது சமூக வலைத்தளத்தில் இது சம்பந்தமாக பகிர்ந்துள்ள பதிவு தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. அதில், தலைநகர் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நீட் தேர்வுக்கு எதிராக காக்ரோச் ஜனதா பார்ட்டி இளைஞர்கள், இளம் பெண்கள் லட்சக்கணக்கில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையின் தடியடி, கண்ணீர் புகை குண்டுகளுக்கும் அஞ்சாமல் தொடர்ந்து அறவழியில் போராடி கொண்டிருக்கிறார்கள்.

இதே ஜந்தர் மந்தரில் அப்போதைய காங்கிரஸ் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் பாஜக கட்சி அன்னா ஹசாரே தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டது. அப்போது ஓடோடி சென்று ஆதரவு குரல் கொடுத்த சிஎம் சார், தற்போது எங்கு பதுங்கி இருக்கிறீர்கள்? என கடும் கேள்வியை முன்வைத்துள்ளார் அப்பாவு.

தொடர்ந்து அவரின் பதிவில், மக்களுக்காக போராடும் நம் இளைஞர்களை டெல்லி காவல்துறை கண்மூடித்தனமாக தாக்கி மண்டையை உடைத்த போதும் கண்டனக் குரல் எழுப்பாமல் மௌனம் காப்பது ஏன் சிஎம் சார். உங்கள் நண்பர் பாடகர் அறிவை சென்னை கோட்டை முன்பாக கோஷம் எழுப்புவதை போன்று குரல் எழுப்ப செய்து, உடனடியாக உங்கள் அறைக்கு அழைத்து பேசிய நடத்திய நாடகம் தமிழ்நாட்டில் சந்தி சிரிக்கிறது சிஎம் சார் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

நாடே கொந்தளித்து நிற்கும் போது தவெகவும், உங்களுடைய தோழமை கட்சிகளும் ஜனநாயகன் பட வெளியீடு விழாவை கொண்டாடி மகிழும் உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்ட பின்னரும் தண்ணீர் தருவதற்கு மறுக்கும் கர்நாடக அரசை கண்டிப்பதற்கு உங்களுக்கும் உங்கள் தோழமை கட்சிக்கும் துணிவில்லையா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் அப்பாவு.

தொடர்ந்து கர்நாடக முதலமைச்சரிடம் தண்ணீரை கேட்டு பெற விடாமல் தடுப்பது கல்லாப் பெட்டி காங்கிரஸா அல்லது டெல்லி எஜமானர் பாஜகவா? தொடர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளை காவு கொடுக்கும் உங்கள் அரசை மிக விரைவிலேயே மக்கள் தூக்கி எறிந்து மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அப்பாவு தன்னுடைய பதிவில் விமர்சனங்களை அடுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link