முதலீட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான முதலீட்டு தேர்வுகளில் ஒன்றாக நிலையான வைப்புத்தொகை அல்லது ஃபிக்சட் டெபாசிட் (FD) உள்ளது. இருப்பினும், வங்கி TDS பிடிக்கத் தொடங்கிவிட்டால் அந்த வருமானத்திற்கான வரி இழக்கப்படும் பலர் தவறாக நினைக்கின்றனர். FD மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு முழுமையாக வரி விதிக்கப்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, உங்கள் வருமான வரியைத் (ITR) தாக்கல் செய்யும்போது அதைச் சரியாகக் கணக்கிடுவது மிகவும் முக்கியம். வட்டி பற்றிய தகவல்களை மறைத்தாலோ அல்லது தவறாகப் புகாரளித்தாலோ, வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வரலாம் அல்லது கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
FD வட்டியைச் சரியாகக் கணக்கிடுவது அவசியம்!
உங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யத் தொடங்குவதற்கு முதலில் முழு நிதியாண்டிலும் அனைத்து FD மூதலீடுகள் மூலமாகவும் ஈட்டப்பட்ட மொத்த வட்டியை நீங்கள் கணக்கிட வேண்டும். இதற்காக நீங்கள் வங்கி அறிக்கைகள் (Bank Statements), FD வட்டிச் சான்றிதழ்கள், படிவம் 26AS, ஆண்டு தகவல் அறிக்கை (AIS) மற்றும் வரி செலுத்துவோர் தகவல் அறிக்கை (TIS) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பதன் மூலம் எந்தவொரு வட்டி தொடர்பான தகவலும் விடுபடுவதைத் தவிர்க்கலாம்.
மொத்த வட்டித் தொகையைக் கணக்கிட்ட பிறகு அது “இதர ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம்” ( Income from Other Sources ) என்ற தலைப்பின் கீழ் சேர்க்கப்படும். வங்கி பிடித்தம் செய்த TDS தொகைக்கு பிந்தைய நிகரத் தொகையை விட, நீங்கள் ஈட்டிய மொத்த வட்டியைத் தான் அறிக்கையிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
வரி வரம்பு மற்றும் TDS சரிசெய்தல்!
FD மூலம் ஈட்டப்படும் வட்டிக்கு உங்கள் வரி வரம்பிற்கு ஏற்ப வரி விதிக்கப்படும். நீங்கள் பழைய வரி முறையை (Old Tax Regime) தேர்வு செய்கிறீர்களா அல்லது புதிய வரி முறையை (New Tax Regime) தேர்வு செய்கிறீர்களா என்பதைப் பொறுத்து உங்கள் வரி விகிதம் அமையும். உதாரணமாக, ஒருவர் 30 சதவீத வரி வரம்பில் வந்தால் அவருடைய FD வட்டிக்கும் 30 சதவீத வரி விதிக்கப்படும். பிரிவு 194A-ன் கீழ், குறிப்பிட்ட வரம்பைத் தாண்டும் போது வங்கிகள் 10 சதவீதம் TDS பிடிக்கின்றன. படிவம் 26AS அல்லது AIS-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த TDS தொகையை நீங்கள் வரி வரவாக கோரலாம்.
உங்கள் வரி வரம்பு விகிதம் 10 சதவீதத்தை விட அதிகமாக இருந்தால் நீங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும். மாறாக உங்கள் வரிப் பொறுப்பு குறைவாக இருந்தால், நீங்கள் ரீஃபண்ட் கோரலாம்.
வரி வரம்பு விதிகள் மற்றும் விலக்குகள்!
புதிய மற்றும் பழைய வரி முறைகளில் வரி வரம்புகள் மாறுபடுகின்றன: ரூ. 3 லட்சம் வரை: இரண்டு முறைகளிலும் வரி இல்லை (Zero Tax).
ரூ. 3 முதல் ரூ. 4 லட்சம் வரை: புதிய முறையில் வரி இல்லை. பழைய முறையில் 5 சதவீதம் வரி.
ரூ. 4 முதல் ரூ. 5 லட்சம் வரை: இரண்டு முறைகளிலும் 5% வரி.
ரூ. 5 முதல் ரூ. 7.5 லட்சம் மற்றும் ரூ. 7.5 முதல் ரூ. 8 லட்சம் வரை: புதிய முறையில் 5 சதவீதம் வரி. பழைய முறையில் 20 சதவீதம் வரி.
ரூ. 8 முதல் ரூ. 10 லட்சம் வரை: புதிய முறையில் 10 சதவீதம் வரி. பழைய முறையில் 20 சதவீதம் வரி.
ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் வரை: புதிய முறையில் 10 சதவீதம் வரி. பழைய முறையில் 30 சதவீதம் வரி.
ரூ. 12 முதல் ரூ. 16 லட்சம் வரை: புதிய முறையில் 15 சதவீதம் வரி.
ரூ. 16 முதல் ரூ. 20 லட்சம் வரை: புதிய முறையில் 20 சதவீதம் வரி.
ரூ. 20 முதல் ரூ. 24 லட்சம் வரை: புதிய முறையில் 25 சதவீதம் வரி.
ரூ. 24 லட்சத்திற்கு மேல்: இரண்டு முறைகளிலும் 30 சதவீதம் வரி.
சிறப்பு விலக்குகள்!
பிரிவு 80TTB: பழைய வரி முறையைத் தேர்ந்தெடுக்கும் மூத்த குடிமக்கள் பிரிவு 80TTB-ன் கீழ் ரூ. 50,000 வரை கழிவு பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
பிரிவு 80C: 5 ஆண்டுகால வரி சேமிப்பு FD திட்டத்தில் பிரிவு 80C-ன் கீழ் ரூ. 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
