பாமகவில் நீண்ட காலமாக தொடர்ந்து வந்த பிரச்சனை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. தந்தை மகனுக்கு இடையில் கடுமையான மோதல் போக்கி நிலவி வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ராமதாஸை சந்தித்து பேசினார் அன்புமணி. இதனால் இருவருக்கும் இடையில் நீடித்து வந்த மோதல் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ராமதாஸ் அதிரடி முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே பாமக இரண்டு பிரிவாக செயல்பட்டது. ராமதாஸ் தலைமையில் ஒரு தரப்பும், அன்புமணிக்கு ஆதரவாக ஒரு தரப்பும் செயல்பட்டது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்த அன்புமணி பாமக பெயர், கொடி மற்றும் சின்னத்துடன் பரப்புரையில் ஈடுபட்டார். இதனிடையில் இதற்கு ராமதாஸ் தரப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் இருந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
பாமகவின் பெயர், கொடி சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். பாமக தலைவராக தன்னை அங்கீகரிக்க வேண்டுமெனவும் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் சமீபத்தில் அன்புமணியுடன் அவர் இணைந்த நிலையில், தற்போது தனது மகனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கினை ராமதாஸ் திரும்ப பெற்றுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
பாமக தலைவராக தன்னை அறிவிக்கக்கோரி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கினை ராமதாஸ் திரும்ப பெற்றிருக்கிறார். தங்களுக்கு இடையிலான பிரச்சனை சுமூகமாக தீர்ந்து விட்டது. இதன் காரணமாக உரிமையியல் நீதிமன்றத்தில் அன்புமணிக்கு எதிராக தொடர்ந்த வழக்கினை திரும்ப பெறுவதாக ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் இந்த வழக்கினை முடித்து வைத்துள்ளது.
இது பாமகவில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏறகனவே கட்சி பொறுப்புகளை அன்புமணியிடம் ஒப்படைத்து விட்டு, ராமதாஸ் ஓய்வு எடுக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. அதனை உறுதி செய்யும் விதமாக தன்னை பாமக தலைவராக அங்கீகரிக்க வேண்டுமென தொடர்ந்த வழக்கினை ராமதாஸ் திரும்ப பெற்றுள்ளார். இதன் காரணமாக மகன் அன்புமணிக்கு அவர் வழி விட்டு விட்டார் என இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
இதனிடையில் ராமதாஸ், அன்புமணி மீண்டும் ஒன்றிணைந்த நிலையில் பாமக முன்னாள் எம்எல்ஏ அருள் கடும் அதிருப்தியில் இருக்கிறார். பாமகவில் பிரச்சனை நிலவிய சமயத்தில் அவர் ராமதாஸுக்கு ஆதரவாக செயல்பட்டார். இந்நிலையில் இருவரும் சேர்ந்ததை தொடர்ந்து, இந்த முடிவினை தேர்தலுக்கு முன்பாகவே எடுத்து இருக்கலாம். ராமதாஸை நம்பி பல கோடி ரூபாய் செலவு செய்து கடனாளியாக மாறியுள்ளோம். எங்களை நடுரோட்டி விட்டு விட்டார் என ராமதாஸ் மீது விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார் அருள். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் இருந்தும் தங்களுக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அதோடு தங்களின் முடிவினை விரைவில் அறிவிப்போம் எனவும் தெரிவித்த அருள், அன்புமணியை தலைவராக ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் எனவும் திட்டவட்டமாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
