சிசேரியன் பிரசவத்தில் அடுத்தடுத்து 5 பெண்கள் பலி.. ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் என்ன நடந்தது? – rajasthan government hospital 5 women die after c section

ராஜஸ்தானின் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையின் தாய்-சேய் நலப் பிரிவில், அறுவை சிகிச்சை பிரசவம் செய்த பிறகு 6 நாட்களுக்குள் 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ராஜஸ்தான் மாநிலம் பில்வாராவில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் உள்ள தாய்-சேய் நலப் பிரிவில் சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு வெறும் ஆறு நாட்களுக்குள் ஐந்து பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொட்லா பகுதியைச் சேர்ந்த 32 வயதான சங்கீதா ஜினாகர். சிசேரியன் பிரசவத்திற்குப் பிறகு அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, போதுமான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று அவரது குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்தை குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திமுக, அதிமுக ஆசை தமிழ்நாட்டில் ஒருபோதும் நிறைவேறாது! தவெக MLA ஆர் எஸ் முருகன் அதிரடி பேட்டி

இந்த உயிரிழப்புகளைத் தொடர்ந்து, மருத்துவமனையின் அறுவைச் சிகிச்சை அறையில் இருந்து எடுக்கப்பட்ட கல்ச்சர் பரிசோதனை மாதிரிகளில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், அந்தத் தொற்றுக்கும் பெண்களின் உயிரிழப்புக்கு காரணம் என இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மார்ச் முதல் 9 தாய்மார்கள் உயிரிழப்பு

மேலும் விசாரணையில் சங்கீதா ஜினாகருக்கு முன்பாக, ஜூலை 5-ஆம் தேதி ஷிம்லா குஜ்ஜர், ஜூலை 7-ஆம் தேதி போரி தேவி, ஜூலை 8-ஆம் தேதி ஈஷா பாண்டே, ஜூலை 9-ஆம் தேதி திவ்யா ஆகியோரும் சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினரும் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மருத்துவர்களின் அலட்சியமே இந்த மரணங்களுக்கு காரணம் என குற்றம்சாட்டியுள்ளனர்.அதுமட்டுமின்றி கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மகாத்மா காந்தி மருத்துவமனையில் மொத்தம் 9 தாய்மார்கள் உயிரிழந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவ அலட்சியம் இல்லை என மருத்துவமனை விளக்கம்

உயிரிழப்புகளுக்கு மருத்துவ அலட்சியம் காரணம் என்ற குற்றச்சாட்டை மருத்துவமனை நிர்வாகம் முற்றிலும் மறுத்துள்ளது. ஒவ்வொரு பெண்களும் அவர்களது உடல்நலக் கோளாறுகளால் ஏற்பட்ட சிக்கல்களால்தான் உயிரிழந்தனர் என்றும், தொற்று காரணமாக மரணம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

அறுவைச் சிகிச்சை வசதிகள் குறித்த சந்தேகம்

இந்த மருத்துவமனையில் தினமும் 30 முதல் 40 சிசேரியன் அறுவைச் சிகிச்சைகள் நடைபெறுகின்றன. ஆனால், பயன்படுத்துவதற்கு வெறும் 8 அறுவைச் சிகிச்சை கருவித் தொகுப்புகள் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அதில் 5 வழக்கமான பயன்பாட்டிற்கும், 3 அவசர சிகிச்சைக்குமானவையாகும்.
ஒவ்வொரு கருவித் தொகுப்பையும் மீண்டும் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரம் கிருமி நீக்கம் செய்ய வேண்டியிருப்பதால், இத்தனை அறுவைச் சிகிச்சைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள போதுமான வசதிகள் உள்ளனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விசாரணைக் குழு அமைப்பு

இந்த சம்பவம் தொடர்பாக நுண்ணுயிரியல், அறுவைச் சிகிச்சை, மகப்பேறு மருத்துவம் மற்றும் மயக்கவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் நிபுணர்களைக் கொண்டு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் தொடரும் இதுபோன்ற சம்பவங்கள்

இந்தச் சம்பவத்திற்கு முன்பாகவும், மே மாதத்தில் கோட்டா அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்குப் பிறகு 5 பெண்கள் உயிரிழந்தனர். ஜூன் மாதத்தில் பிகானேர் மருத்துவமனையில் 6 பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு உடல்நலக் குறைவு ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்தனர்.
இதனால், ராஜஸ்தானில் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சையின் தரம் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன. தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் முடிவுகள், இந்த உயிரிழப்புகளுக்குப் பின்னால் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் அல்லது அமைப்புசார் குறைபாடுகள் இருந்தனவா என்பதை தெளிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source link