எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. விஜயின் கடைசி திரைப்படம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 8 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன்பே படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தாலும், ரசிகர்களின் உற்சாகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தமிழகத்திற்கு முன்னதாக கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியான படத்தில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்” என்ற டைட்டில் கார்டு இடம்பெற்றது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும், கோட்-சூட் அணிந்த முதலமைச்சர் விஜய்யின் தற்போதைய தோற்றத்தை நினைவூட்டும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் இப்படத்திற்கான டிக்கெட் கட்டணம் ரூ.183 முதல் ரூ.190 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கொச்சியில் ரூ.700, டெல்லியில் ரூ.900, மும்பையில் ரூ.1,000 மற்றும் பெங்களூருவில் ரூ.2,500 வரை டிக்கெட்டுகள் விற்பனையானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
படம் வெளியாகி தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி, ஆட்டம்-பாடலுடன் உற்சாகமாக கொண்டாடினர். இந்தக் கொண்டாட்டத்தில் பல்வேறு ரசிகர் மன்றங்களும் பங்கேற்றன. அதேபோல், திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தை முதல் நாளிலேயே திரையரங்குகளில் கண்டு ரசிக்க வருகை தந்தது ரசிகர்களிடையே மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் நாள் வசூலிலும் இப்படம் புதிய சாதனைகளை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
