சென்னை,
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி, தொகுதி உடன்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுவரை 6 கட்சிகளுக்கு 43 தொகுதிகளை ஒதுக்கீடு திமுக செய்துள்ளது.கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுடன் இன்னும் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் தி.மு.க. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இதுதவிர வி.சி.க.வுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், முதல்வர் முக ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இரட்டை இலக்க எண்ணிக்கையில் விசிகவுக்கு தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை திருமாவளவன் முன்வைத்து இருக்கலாம் என சொல்லப்படுகிறது. இது குறித்த இறுதி முடிவு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
