சிம்லா
இமாசல பிரதேசத்தில் போதை பொருட்கள் விஷயத்தில் பூஜ்ய சகிப்பு தன்மை கொள்கையை போலீசார் கடைபிடித்து வருகின்றனர். தொடர்ந்து, போதை பொருள் கடத்தல் தொடர்பான நெட்வொர்க்கை கண்டறியும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சிறப்பு அதிரடி படை, மத்திய சரக போலீஸ் படையை சேர்ந்த 4 போலீசார் போதை பொருள் கடத்தலில் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு அபிஷேக் கூறும்போது, போதை பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தொடர்ந்து கடும் நடவடிக்கையை சிம்லா போலீசார் எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 போலீசார் கைது செய்யப்பட்டனர் என்றார்.
அவர்கள் சம்பவ நாளின்போது, கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த நெவில்லே ஹாரீசன் என்பவரை குல்லு பகுதியில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவரிடம் 1,450 போதை மாத்திரைகள், 30 கிராம் எம்.டி.எம்.ஏ. இருந்துள்ளன. அவற்றில், குறிப்பிட்ட அளவிலான போதை மாத்திரைகளை கைப்பற்றி வைத்து கொண்டு, மீதமிருந்த 616 போதை மாத்திரைகளை அவரிடம் கொடுத்து அனுப்பி விட்டனர்.
இதில், ஹாரீசனுக்கு எதிராக வழக்கு எதுவும் பதியாமல் அவரை போக விட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. சி.சி.டி.வி. காட்சி, தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப உதவியுடன் 4 போலீசாரும் கைது செய்யப்பட்டனர் என அவர் கூறினார். அவர்கள் 4 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர். கோர்ட்டில் அவர்கள் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
